தாஜ்மஹால் அழிந்து போனால் மீண்டும் அதைப் பாதுகாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் மதன் பி.லோகூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஆகஸ்ட் 28) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தாஜ்மஹால் அழிந்து போய்விட்டால் அதைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது” என எச்சரித்தனர் நீதிபதிகள்.
“தாஜ்மஹாலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு விஷயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; பசுமைத் திட்டத்தின் கீழ், அதனைக் கொண்டு வர வேண்டும். தாஜ்மஹால் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி ஆகியோர் வாதிடும்போது, “தாஜ்மஹால் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டடக் கலை கல்லூரி தயாரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான திட்டத்தையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஆகா கான் பவுண்டேசன், கலை மற்றும் கலாசாரத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை, நினைவுச் சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச கவுன்சில் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளிடம் இருந்து தாஜ்மஹால் பாதுகாப்புக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன” என வாதாடினார். ஆக்ரா நகரத்தைக் கலாச்சார நகரமாக அறிவிப்பது தொடர்பான திட்டத்தை உத்தரப் பிரதேச மாநில அரசிடம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.�,