காக்கிச் சட்டையைப் பார்த்தால் ஒருகாலத்தில் பயம் இருக்கும். மரியாதையும் இருக்கும். ஆனால், இப்போது பயமும் இல்லை. மரியாதையும் இல்லை. காவல் துறையினர் மீது அண்மை காலமாக நடத்தப்படும் தாக்குதல்களே அதற்கு உதாரணம்.
மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவு கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சுமார் 429 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இது மறைக்கப்பட்ட புள்ளிவிவரம். தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்றும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவர்கள், கலவரத்தில் தாக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் மரணமடையும் காவலர்கள் என எட்டு பிரிவுகளாக அதில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 2015ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் கூட்டங்கள் கூடிய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிய 54 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
அதே ஆண்டு காவலர்கள்மீது குற்றவாளிகள் நடத்திய தாக்குதலில் ஓர் ஆய்வாளர், ஐந்து காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல் 2016ஆம் ஆண்டு கலவரம் மற்றும் பெரும் கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்தனர்.
குற்றவாளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல் துறை உயர் அதிகாரி உட்பட மொத்தம் 38 காவலர்கள் காயம் அடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளில் மட்டும் கடந்த 2015, 2016 ஆண்டுகளில் 130 போலீஸார் காயமடைந்துள்ளனர். மேலும் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் விபத்துகளின் மூலம் சுமார் 299 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் இந்த இரண்டு ஆண்டுகளில் 429 காவல் துறையினர் பல்வேறு சம்பவங்களில் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை பாதுகாப்புப் பணியில் சுமார் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர்மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை என்பவர் மணல் திருட்டு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதே போல கடந்த வாரம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் முதல்நிலை காவலர் மோகன்ராஜ் ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டார். காவல் துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், மாநிலத்தின் பாதுகாப்புக்கு சமூக விரோதிகள் விடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு காரணம் பொதுவாகவே காவல் துறையினர் மீதிருக்கும் அச்சம் போய்விட்டதா அல்லது சில சம்பவங்களில் காவல் துறையின் செயல்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வின் எதிர்வினையா என்ற கேள்வி எழுகிறது.
இந்த இரண்டு காரணங்களையும் மறுக்கும் காவல் துறை அதிகாரிகள் கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தி புதிதாகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளே இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு காரணம் என்கின்றனர்.
ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து பெரும்பாலான தாக்குதல் சம்பவங்களில் கைதான குற்றவாளிகள் 16 வயதிலிருந்து 25 வயதுடையவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் காவல் துறை அதிகாரிகள் கஞ்சா தவிர, மருந்து கடைகளில் சட்ட விரோதமாகப் போதை தரும் சில மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் இளம் குற்றவாளிகள் போதையில் அதன் பின் விளைவு தெரியாமல் இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர்.
இனி இதுபோன்ற தாக்குதல் சம்வங்களைத் தவிர்க்க போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவும், அந்தந்த காவல் நிலை அதிகாரிகள் மூலம் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியான சித்தண்ணனிடம் பேசினோம். “சமூக விரோதிகளுக்கும், ரவுடிகளுக்கும் போலீஸ் மீது பயம் இல்லாமல் போனதுக்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகள்தான். ரவுடிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். ஒரு ரவுடியை போலீஸ் கைது செய்தால் அடுத்த நிமிடமே ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் இருந்து காவல் துறைக்கு போன் வருகிறது. இதனால், ரவுடிகள்மீது நடவடிக்கை எடுக்க முடியாத நெருக்கடிக்கு போலீஸ் தள்ளப்படுகிறது. அதனால்தான் ரவுடிகள் போலீஸாரை தாக்குவது என்பது சர்வசாதாரணமாக நடக்கிறது” என்றார்.
காவல் துறை மீது இப்படியான தாக்குதல்கள் நடந்தாலுமே பொதுமக்கள் தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை. அதற்குக் காரணம், உங்கள் நண்பன் எனச் சொல்லும் போலீஸ் பல தருணங்களில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல… ரவுடிகளுக்கும் நண்பனாக இருப்பதால்தான்!
�,”