நாட்டின் தலைசிறந்த பத்திரிகையாளரும் மனித உரிமைப்போராளியும் மாநிலங்களவையின் முன்னாள் எம்பியுமான குல்தீப் நய்யார் இன்று(23.8.18) அதிகாலையில் காலமானார்.
தனது வாழ்நாள் முழுவதும் மனசாட்சியுடனும் நேர்மையுடனும் வாழ்ந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் தனது 95வது வயதில் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலுக்காக 5 நாள்களுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இரவு 12.30 மணிக்கு காலமானார்.
குல்தீப் நய்யார் 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதியன்று அன்றைய பிரிட்டிஷ் பஞ்சாபில் சியல்கோட் என்ற ஊரில் குர்பக்ஸ் சிங்- பூரான் தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். லாகூரில் பிஏ(ஹானர்ஸ்)மற்றும் எல்எல்பி சட்டப் படிப்பையும் முடித்த அவர் பத்திரிகைத் துறையில் கொண்ட ஆர்வம் காரணமாக முதன் முதலாக ஒரு உருது பத்திரிகையில் செய்தியாளராக தனது பத்திரிகையாளர் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அன்றைய காலத்தில் செய்தியாளராக இருப்பவர்கள் பத்திரிகையில் தலையங்கம் எழுத முடியாது. பத்திரிகை ஆசிரியராக இருப்பவர் மட்டுமே தலையங்கம் எழுத முடியும் ஆசிரியராகவும் மாற முடியாது. இந்த மரபை உடைத்தெறிந்தவர் குல்தீப் நய்யார்தான். உருது பத்திரிகையின் செய்தியாளராக இருந்த குல்தீப், தி ஸ்டேட்ஸ்மேனின் டெல்லி பதிப்பில் ஆசிரியராக பணி புரிந்த பெருமை கொண்டவர். இதனைத்தொடர்ந்து 80 செய்தி நாளிதழ்களில் சிறப்பு பத்தி எழுத்தாளராகவும் (காலம்னிஸ்டாக) கட்டுரையாளராகவும் 14 மொழிகளில் எழுதியுள்ளார். இவற்றில் டெக்கான் ஹெரால்டு,தி சன்டே கார்டியன்,தி நியூஸ், தி ஸ்டேட்ஸ்மேன்,தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன், பிரபா சக்தி போன்றவை முக்கியமான பத்திரிகைகளாகும். தி இந்தியன் எக்ஸ்பிரஸிலும் நீண்டகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015இல் அந்த பத்திரிகை நிறுவனமும் வாழ்நாள் சாதனையாளர் விருதாக ராம்நாத் கோயங்கா விருது வழங்கியது
நாடு முழுவதும் எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்வார். முதல் எதிர்ப்பு குரலாகவும் இவரது பதிவுகள் இருக்கும். நாட்டின் இருண்டகாலமான அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்ததால் (1975-77) கைது செய்யப்பட்டார்.
இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீ்ர்த்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அமைதியான மண்டலமாக தெற்காசிய திகழ வேண்டும் என்றும் தனது எழுத்துகள் மூலமாக தெரிவித்து வந்தார். குல்தீப்பின் எழுத்துக்களின் வீச்சு சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. 1990இல் கிரேட் பிரிட்டனுக்கு ஹைகமிஷனராக நியமிக்கப்பட்டார். 1996இல் ஐநாவிற்கு இந்திய துாதுக்குழுவாக சென்றார். 1997இல் மாநிலங்களவையின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
பத்திரிகைச் சுதந்திரத்திற்காக பாடுபட்டதால் 2003இல் ஆஸ்தர் அவார்டு (பத்திரிகை சுதந்திரத்திற்கான விருது) வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் போர்களற்ற அமைதியான உலகம் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்ததால் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக சாஹித் நியோகி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஒரு செய்தியாளராக இருந்து தனது அறிவாற்றலாலும் திறமையாலும் ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். மனித உரிமைக்கு குரல் கொடுத்ததினால் கைது செய்யப்பட்டார். இந்திய பாகிஸ்தான் நல்லுறவுகளுக்காக இறுதிவரை பாடுபட்டார். இதனால், குல்தீப் நய்யாரின் வாழ்க்கை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக திகழுகிறது
�,”