கர்நாடகாவில் தலித் வாலிபரைத் திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணிப் பெண்ணைக் குடும்பத்தாரே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், முட்டேபிஹால் தாலுக்கா, பிஜாபூரில் உள்ள குண்டகனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சயாபன்னா ஷரனப்பா கொன்னூர்(24). அதே பகுதியை சேர்ந்தவர் பானு பேகம் (21). இவர்கள் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாகக் காதலித்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, பானுவின் குடும்பத்தினருக்கு அவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, சயாபன்னாவை பானுவின் குடும்பத்தார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பானுவைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு தங்கள் மகள் மைனர் என சயாபன்னாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு, ஜனவரி 24 ஆம் தேதி பானு மற்றும் சயாபன்னா கோவாவிற்கு ஓடினார்கள். அங்கேயே வாழ முடிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து அதை பதிவும் செய்துள்ளனர்.
பானு கருவுற்றதும் குண்டகனாலாவுக்கு திரும்ப முடிவு செய்தனர். குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் எனக் கருதினார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த சனிக்கிழமை (ஜூன்,3) அவர்கள் கிரமத்துக்கு வந்தனர். பானு கர்ப்பமாக இருப்பதை இரு குடும்பத்தாரிடமும் தெரிவிக்க ஆசைப்பட்டனர். அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினர் அன்று முழுவதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சயாபன்னாவை விட்டு வரும்படி பானுவின் குடும்பத்தார் பானுவை மிரட்டியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். அன்று இரவு, பானுவின் தாய், சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோருடன் சயாபன்னாவின் தந்தையும் இணைந்து சயாபன்னாவை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், பானுவின் தாயார் அவர் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பித்த சயாபன்னா தலிகோட்டி காவல் நிலையத்துக்கு ஓடினார். போலீஸாரிடம் அங்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர் பானுவை காப்பாற்ற வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் செல்வதற்குள் பானு மீது அவரது குடும்பத்தார் தீ வைத்துள்ளனர். அவர் சென்ற 10 நிமிடத்துக்குள் 2 போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். உதவிகேட்டு சயாபன்னா கதறி அழுதுள்ளார். ஆனால், அதற்குள் பானு இறந்துள்ளார். அவரைக் காப்பற்ற போராடிய சயாபன்னாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என தலிகோட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பி.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தான் உதவிக்கு அழைத்தபோது அருகில் வசிக்கும் மக்கள் உதவ வரவில்லை என போலீஸாரிடம் சயாபன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அருகில் வசித்தவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது தாங்கள் எதையும் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை என அவர்கள் பதிலளித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று(ஜூன்,4) பானுவின் தாய், சகோதரர்,சகோதரி மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பானுவை எரிப்பதற்கு முன்பு பலமுறை அவரைக் கத்தியால் குத்தியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட பானுவின் இரு மூத்த சகோதரிகள் மற்றும் இரு மூத்த சகோதரர்களை தேடி வருவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தலித் இளைஞரான சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி உடுமலைப்பேட்டை பஜாரில் வைத்து கூலிப்படையினர் அவர்களைச் சரமாரியாக வெட்டினர். இதில் சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.�,