தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில் உழவன் செயலியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய வசதியின் மூலம், தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்து விவசாயிகளே பதிவு செய்ய முடியும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறி வரும் பருவநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல விளைநிலங்கள் தரிசாக மாறி வருகிறது. காலப்போக்கில் இவை வீட்டு மனைகளாக மாறும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் விவசாய நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தரிசு நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேளாண்மைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தரிசு நிலங்களைக் கணக்கெடுக்கின்றனர்.
மேலும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தரிசு நிலங்களை, தரிசு நில மேம்பாட்டுத்திட்டம், தொகுப்பு தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் விளை நிலங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கிராமங்கள் தோறும் சென்று தரிசு நிலங்களைக் கண்டறிவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் சில நிலங்கள் விடுபட்டு விடுவதால் தரிசு நிலங்களை முழுமையாக கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே தற்போது தங்களிடமுள்ள தரிசு நிலங்கள் குறித்த விவரங்களை உழவன் செயலி மூலம் விவசாயிகளே நேரடியாக பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் தரிசு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து மேம்படுத்த வாய்ப்பு உருவாகும். எனவே உழவன் செயலி மூலம் தரிசு நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்து அதை விளைநிலமாக மாற்றும் அரசின் முயற்சியில் இணைந்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
**ராஜ்**
.