�தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட விவகாரத்தில் குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களான டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நடத்தவிடாமல் பூட்டு போடப்பட்டது. இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விஷால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
சங்கத்துக்குப் பூட்டு போட்டது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க செளந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் புகார் அளித்து இதுவரை காவல் துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உரிய முகாந்திரம் இருந்தால் செளந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.�,