[தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண்?

Published On:

| By Balaji

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கேஏ செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது, அவர், “பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 1 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தேர்வை எழுதி முடித்திருக்கின்றனர். இந்தியாவில் கொண்டுவரப்படும் ஆன்லைன் தேர்வுகள் குறித்து அட்டவணை வழங்கப்படும். மத்திய அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. நம்முடைய மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் சந்திக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்கள். புதிய பாடத்திட்டம் குறித்துப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சப்படத்தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று முன் தினம் (மார்ச் 16) தொடங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வில் வினாக்கள் கடுமையாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண்ணில், 3, 4, 7, 8 மற்றும், 16 ஆகிய வினாக்கள் , பாடத்தின் உள்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்களில், 26, 29, 31, 32 மற்றும், 34 ஆகிய வினாக்கள், நான்கு மதிப்பெண் வினாக்களில், 36, 38 மற்றும், 39 ஆகிய வினாக்களும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும்வகையில் இருந்தன. பாடத்தின் பின்பக்க கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளன. மாறாக, செய்யுள், உரைநடை ஆகியவற்றில், ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு ஆகியவற்றில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel