தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தும் பைனான்ஸியர்கள்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமா 365: பகுதி – 41

**இராமானுஜம்**

தமிழ் சினிமா தயாரிப்பில் சொந்த பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

விஐயா வாஹினி, லைகா, ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட், ரெட் ஜெயண்ட், ரிலையன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமான சினிமா பைனான்சியர்கள் மூலம் கடன் பெறுவதில்லை.

இதில் லைகா நிறுவனம் குறிப்பிட்ட சில பைனான்சியர்களிடம் கடன் வாங்கியுள்ளது. இவர்கள் தவிர்த்து தமிழில் தயாரிக்கப்படும் வியாபார முக்கியத்துவம் மிக்க படங்களில் மதுரை அன்புச் செழியனின் பைனான்ஸ் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தவிர்க்க முடியாத ஒன்றாக கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இவரிடம் கடன் வாங்க முடியாதவர்கள் இவரது சகோதரர் அழகர்சாமியிடம் வாங்குகின்றனர். இவர்கள் இருவருடனும் இணக்கமில்லாத தயாரிப்பாளர்கள் பைனான்ஸ் கொடுப்பதை மட்டும் தொழிலாக கொண்டவர்களிடம் கடன் வாங்குகின்றனர்.

அதற்கு காரணம் வியாபார சுதந்திரம். தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்தை தங்கள் விருப்பம் போல் வியாபாரம் செய்ய முடியும், பட வெளியீட்டு நேரத்தில் கடன் வாங்கிய பைனான்சியருக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டியது இருக்கும். கடனை திருப்பி செலுத்துவதில் நெகிழ்வுத் தன்மையும், விட்டுக் கொடுத்து கணக்கை முடிவுக்கு கொண்டு வரும் தன்மை தொழில் முறை பைனான்சியர்களிடம் இருக்கிறது.

இது போன்ற அணுகுமுறை அழகர்சாமியிடம் இருப்பதாக கூறுகின்றனர் தயாரிப்பாளர்கள். இதில் இருந்து நேர்மாறான அணுகுமுறை மதுரை அன்புச் செழியனிடம் உள்ளது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்

அவரிடம் கறார் தன்மையும் உண்டு விட்டுக் கொடுத்தலும் இருக்கும் ஆனால் அதற்காக இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். மற்ற பைனான்சியர்களிடம் கடன் வாங்குவதற்கு சில நடைமுறைகளை முடித்த பின்னரே பணம் கிடைக்கும். அன்பு செழியனிடம் சினிமா தயாரிப்புக்கு எந்த வித முன் நடைமுறைகளும் இன்றி எத்தனை கோடி ரூபாய் வேண்டுமென்றாலும் வாங்க முடியும். அதன் பின்னரே அதற்கான ஆவணங்களை வாங்குவது தொடங்கும் என்கின்றனர்.

அதே நேரம் தமிழக விநியோக உரிமைகளை வியாபாரம் செய்வதில் தயாரிப்பாளர் சுதந்திரமாக செயல்படுவது இயலாத காரியம். ஏனென்றால் அன்புச் செழியன் தொழில் முறை பைனான்சியராக மட்டும் இல்லை திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளராக இருப்பதால், இவரது ஆதிக்கம், அதிகாரம் சம்பந்தபட்ட பட வியாபாரத்தில் எதிரொலிக்கும்.

அன்புச் செழியனிடம் பைனான்ஸ் வாங்கி குறிப்பிட்ட படி கடனை திருப்பி கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகைகள் உண்டு. இவரது நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தயாரிப்பாளர்கள் வெங்கடேஷ்வரன், அசோக்குமார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக இவர் மீது திரை துறையில் புகார் கூறப்பட்டது.

அதே நேரம் அன்புச் செழியன் பைனான்ஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டால் தமிழ் சினிமாவில் தயாரிப்பு தொழில் முடங்கி விடும் என அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட போது அன்புச் செழியனுக்கு ஆதரவாக ஒரு பகுதி தயாரிப்பாளர்கள் கூட்டம் போட்டு பத்திரிகையாளர்களிடம் வாழ்த்து பா பாடியதும் இங்கு அரங்கேறியது.

தமிழ் சினிமா சம்பந்தபட்ட எந்தவொரு அமைப்பிலும் தலைமைப் பொறுப்பில் அன்புச் செழியன் இல்லை. ஆனால் இவரது விருப்பத்தை கேட்டே செங்கல்பட்டு, மதுரை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்புகளில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இப்படியொரு அதிகார மையமாக, ஆதிக்கமிக்கவராக அன்புச் செழியன் இருந்து வரும் சூழலில் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பெயரளவுக்கு நடத்துகின்ற கூட்டங்களில் தமிழ் சினிமா வியாபாரம், விநியோகம், திரையிடல் ஆகியவற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணி கலந்து கொள்ள கூடாது என்று அவர் சார்ந்துள்ள கொங்கு மண்டலத்திலிருந்து எதிர்ப்பு குரல் எழுப்பபடுகிறது. இது அன்புச் செழியன் எதிர்பார்க்காத ஒன்று.

இவரோடு இணைந்து செயல்படுகிற திருப்பூர் சுப்பிரமணியன் கோவை ஏரியா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதியாக இனி எப்போதும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டங்களில் கலந்து கொள்வது சாத்தியமில்லை என்கிற நிலையில் கூட்டமைப்புக்குள் வந்து போகிற சூழல் பைனான்சியர்களுக்கு எளிதானது.

தமிழ் சினிமா சம்பந்தமான எந்த பிரச்சினையாக இருந்தாலும் திரையரங்கு, விநியோகஸ்தர்களின் கருத்துக்களை அரசு மட்டத்திலும், ஊடகத்திலும் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசுகிறவர் திருப்பூர் சுப்ரமணி மட்டுமே. இப்படிப்பட்ட நபரை பைனான்சியர்கள் சங்கத்தின் முகமாக அடையாளப்படுத்துவதன் மூலம் தனக்கு எதிராக அல்லது போட்டியாக வளர்ந்துவரும் குறுநில மன்னர்களை கட்டுப்படுத்த சுப்பிரமணியை பயன்படுத்த முடியும் என்பதாலேயே இவரை தலைவராக்கினார்கள் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

குறுநில மன்னர்கள் யார் ? நாளை..

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

**ஆசிரியர் குறிப்பு**

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

**முந்தைய பகுதி – [சினிமா சதுரங்கம்: பகடை உருட்டப்படுவது யாருக்காக?](https://minnambalam.com/k/2019/02/13/67)**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share