தமிழ் இருக்கை: திமுக அறிவிப்புக்கு அமைச்சர் வரவேற்பு!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியளிக்கப்படும் என்ற அறிவிப்புக்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று (பிப்ரவரி 7) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி தருவதை வரவேற்கிறோம். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அவர்கள் நேரிடையாக வந்து கொடுத்தால் நல்லது. அனைத்து அரசியல் கட்சிகளுமே நிதி அளிக்கலாம். தமிழுக்குச் சேவை ஆற்றுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக் கனவு எட்டிவிடும் தூரத்தில் உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழ் மொழியில் புதிதாக 250 சொற்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடவுள்ளோம். சொற்குவை என்ற பெயரில் புதிய சொற்களைத் தொகுக்கும் முயற்சியில் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி ஈடுபட்டுள்ளார். தமிழ்ப் பல்கலையில் தமிழ் வளர் மையம் என்ற பெயரில் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அடுத்த தலைமுறையினர் தமிழ் படிப்பதற்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமைய வேண்டும் என்பதற்காகப் போராடிவருகிறோம். இந்திய அளவில் பெங்காலியும் தமிழும் மட்டுமே இந்த உரிமைக்காகப் போராடிவருகின்றன. சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இது தொடர்பாக டெல்லி சென்று வலியுறுத்தியிருக்கிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.�,