தமிழ் மொழி ஆய்விற்கான மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் வாயிலாகத் தெரிகிறது.
தமிழ் மொழியின் ஆய்விற்காக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத் தொகை 56 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் மொழி உள்ளிட்ட செம்மொழிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், மானியங்கள் குறித்தும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட விளம்பர செயல்பாடுகள் குறித்தும் அதிமுக எம்.பி ஏ.விஜயகுமார் மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினார்.
அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்துள்ள தகவல்களின்படி, 2014-15ஆம் கல்வியாண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2015-16ஆம் கல்வியாண்டில் ரூ.11.99 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் அதிகபட்சமாக வழங்கப்பட்ட மானியத் தொகையாகும்.
2016-17ஆம் கல்வியாண்டில் ரூ.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2017-18ஆம் கல்வியாண்டில் ரூ.10.59 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் கல்வியாண்டிலோ ரூ.4.65 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 56 விழுக்காடு சரிவாகும். ஏற்கெனவே புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வாயிலாக மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக தமிழக எம்.பிக்கள் குரல் எழுப்பியுள்ள நிலையில் இத்தகவல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் கொடுத்துள்ள பதிலில், “செம்மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்துவதே அரசின் கொள்கை. செம்மொழித் தமிழின் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழறிஞர்களுக்கு தொல்காப்பியர் விருது, இளம் அறிஞர் விருது, குறள் பீடம் விருது போன்றவற்றை வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.
இதுபோக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற இதர செம்மொழிகளின் வளர்ச்சிக்காகவும் மைசூருவில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”