|தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக மருத்துவ இடங்கள்!

Published On:

| By Balaji

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் திட்டமிட்டிருப்பதால், தமிழகத்துக்கு வரும் கல்வியாண்டில் கூடுதல் மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2019ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பில் புதிதாக 950க்கும் அதிகமான இடங்களை உயர்த்தக்கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் 345 இடங்கள் வரை கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த 2 கட்ட ஆய்வை முடித்துள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் கோரி மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் கரூர் மருத்துவக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டில் 150 இடங்கள் வரை இளங்கலை மருத்துவப் படிப்பில் உருவாகும். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “கரூரோடு சேர்த்து தமிழக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 23ஆக உயரப் போகிறது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

வரும் ஆண்டில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கிற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மேற்கொண்டு கூடுதலாக 250 இடங்கள் வரை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களை சேர்க்கவும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களை சேர்க்கவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிதாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

2019ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 2,900. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவக் கல்விக்கு 112 இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share