தமிழ்நாட்டில் காங்கிரஸ் கரைந்து,கட்டெறும்பான கதை

Published On:

| By Balaji

நாட்டு விடுதலைக்குப்பின் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. அது, நேருவின் ஆட்சிக்காலம். ஆனால், இன்று?

‘அச்சச்சோ’ என்று அயல்நாட்டினரும் உச்சுக்கொட்டுகிறார்கள், அக்கட்சியின் நிலையைப் பார்த்து. கர்நாடகா, கேரளாவைத் தவிர்த்து பார்த்தால், பெரிய மாநிலம் எதிலும் காங்கிரஸ் இன்றைக்கு ஆட்சியில் இல்லை. இந்தக் கட்டுரையின் பிரதான அம்சம், தமிழ்நாடு என்றாலும் இந்தியாவின் எல்லைக்கோட்டில் இருந்து ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கட்சியின் வலிமையைப் பார்க்கலாம்.

காஷ்மீரில் காங்கிரஸ் பலம் எப்படி? விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில்வெற்றிப்பெற்றவர்களுக்கே கோப்பை கிடைக்கும். அவை: தங்கம், வெள்ளி, வெண்கலம். அவை மூன்றுமே கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.

இந்தப் பட்டியலில்… மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரம், உத்தரபிரதேசம், பீகார், அரியானா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களையும் சேர்க்கலாம். இங்கு வெண்கலம் கூட கிடைக்காமல் ஏதாவது ஒரு ‘கலத்’தைத் தேடிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு கலம் கிடைத்திருக்கிறது. அக்கலம், திமுக!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம். 1967-ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. ராஜாஜியுடன் முறைத்துக்கொண்டு அந்த ஆண்டில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது. ராஜாஜி, அண்ணாவுடன் கைகோர்த்தார். மேலும் 10 கட்சிகளும் அண்ணாவின் திமுக-வுடன் இணைந்தன. ‘படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்றார், அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர். அது உண்மையும் கூட. ஒரு விபத்தில் சிக்கியதால், படுகாயம் அடைந்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

ஜெயித்தரா?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டது. விருதுநகரில் காமராஜரும் தோற்றார் . நாடு அதிர்ந்து போனது. அண்ணா முதல்வரானார். 2 வருடங்களில் புற்றுநோயினால் அண்ணா இறந்துபோக, கருணாநிதி முதல்வரானார்.

1971-ல் தமிழகச் சட்டசபைக்குத் தேர்தலில் காமராஜர் உஷார் ஆனார்.

ராஜாஜியுடன் கூட்டணி வைத்தார். பெருந்தலைவர் காமராஜர் – ராஜாஜி பங்கேற்ற மெரீனா பொதுக்கூட்டத்துக்கு அவ்வளவு கூட்டம். ‘இந்தத் தேர்தலில் திமுக-வின் கதை முடியப்போகிறது. காமராஜர் மீண்டும் முதல் அமைச்சர் ஆகப்போகிறார்; காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது’ என அநேகமாக அனைத்து பத்திரிகைகளும் எழுதி தீர்த்தன. ஆனால், அப்போதும் காங்கிரஸ் தோற்றது. திமுக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அடுத்தத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என காமராஜர், சென்னை திருமலைபிள்ளை சாலையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, காமராஜர் நெஞ்சில் இரு கத்திகள் பாய்ந்தன. ஒன்று, கருணாநிதியுடன் சண்டை போட்டுவிட்டு எம்.ஜி.ஆர் அதிமுக-வைத் தொடங்கியிருந்தார். இரண்டாவது, சில மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் இந்திரா எமர்ஜென்சியைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இரண்டு நிகழ்வுகளும் காமராஜரை நிலைகுலைய செய்தன. மனதுக்குள் புழுங்கி புழுங்கி இறந்தேபோனார்.

அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பெருங்கூட்டம் ஜி.கே மூப்பனார் தலைமையில் – இந்திரா காங்கிரஸில் ஐக்கியமானது. பா.ராமச்சந்திரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச ஸ்தாபன காங்கிரஸாரும் – ஜனதா கட்சியில் இணைத்துக்கொள்ள -தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸே, காங்கிரஸ் ஆனது.

கடந்த 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை தனியாக நின்று தனது பலத்தைத் தெரிந்துகொள்ள சுயபரிசோதனை செய்துள்ளது.

முதல்முறை 1977-ல். அப்போது இந்திராகாந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டாவது முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது 1989-ல். அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராஜீவ்காந்தி. தொகுதித் தொகுதியாக சுற்றி வந்தார். இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் மூன்றாம் இடத்தையே பிடிக்கமுடிந்தது. இரு தேர்தல்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜயகாந்தின் தேமுதிக மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், காங்கிரஸின் வரிசை எண் எது என்று தெரியவில்லை. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது இடத்தையும் பாமக நான்காவது இடத்தையும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது இடம் காங்கிரஸுக்கா அல்லது பாஜக-வுக்கா? என்பதே கேள்வி.

மாடக்கண்ணு�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel