தமிழ்நாடு காங்கிரஸ்: அரசர் போய் அழகிரி வந்த பின்னணி!

public

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருக்கிறார். தான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியான திருநாவுக்கரசர் மௌனமாகிவிட்டார். டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்குப் பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் உனக்கு எனக்கு என டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்காக கடும் முட்டல் மோதல்கள் நடந்த நிலையில், நான்கு மாதங்கள் தலைவரே இல்லாதிருந்த தமிழக காங்கிரஸுக்கு செப்டம்பர் 2016இல் திருநாவுக்கரசர் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார். இரண்டரை வருடங்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளாமலேயே தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் விசாரித்தோம்.

“திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்குள் புதிய கலாச்சாரத்தை புகுத்தினார். அது திராவிடக் கட்சிகள் இருப்பது போன்ற கலாச்சாரம். யார் காங்கிரஸ் தலைவர்களாக இருப்பவர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையே முன்பு இருந்தது. ஆனால் திருநாவுக்கரசர் வந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை சந்திப்பதற்கே முதலில் அவரது மகனிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்க வேண்டும். திருநாவுக்கரசர் மகன் போன் போட்டால் எடுக்கவேமாட்டார். சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

திருநாவுக்கரசரின் மகனுக்கு நெருக்கமானவர்களுக்கெல்லாம் பதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பதவிகள் எல்லாம் அவர் சொன்னவர்களுக்கே வழங்கப்பட்டன. இதில் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைத்து கோஷ்டித் தலைவர்களும் அதிர்ச்சியாகிவிட்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஏற்கனவே எதிர்த்த ப.சிதம்பரத்தைச் சந்தித்து, ‘நீங்கதான் இதுக்கு ஒரு முடிவெடுக்கணும்’ என்று பல மாதங்களுக்கு முன்பே கூறினர்.

இந்நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என்பதை செலெக்ட் செய்ய ஆரம்பித்தார் திருநாவுக்கரசர். இந்த நடைமுறைகள் மேற்கண்ட தலைவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வேட்பாளர் தேர்வு முறையாக நடைபெறாது என்பதை அவர்கள் டெல்லிக்கு விரிவான புகார்களாக அனுப்பினார்கள்.

இந்த நிலையில்தான் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சக்தி துவக்க விழாவில் பேசிய திருநாவுக்கரசர் தன் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளைப் பேசினார். அப்படிப் பேசிவிட்டு அவர் மேடையில் இருந்த தலைவர்களைப் பார்த்த விதம் பலரையும் கடுப்பாக்கியது. இதையடுத்து உடனே ஒன்று கூடிய திருநாவுக்கரசருக்கு எதிரான சிண்டிகேட், சிதம்பரத்தை சந்தித்தது. அண்மையில் நடைபெற்ற அணிகள் பொறுப்பாளர்களிலும் திருநாவுக்கரசரின் மகன் சொல்பவர்களுக்கே பதவி என்ற நிலை நிலவியது. இதெல்லாம் சேர்ந்துதான் திருநாவுக்கரசரின் பதவிக்கு வேட்டு வைத்துள்ளது” என்றனர்.

மேலும் அவர்கள், “காங்கிரசின் ‘சக்தி’ கூட்டம் ஜனவரி 21ஆம் தேதி நடந்த நிலையில் ஒரு சில நாட்களிலேயே ப.சிதம்பரம் ராகுல் காந்தியை சந்தித்து, இனியும் திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்தால் சரிப்பட்டு வராது என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னார். இதைக் கடந்த ஆறு மாதங்களாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ராகுல், ‘அப்படியானால் புதிய தலைவரை நீங்களே சொல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார். அதன்படிதான் தனக்கு தோதான கே.எஸ். அழகிரியை தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்தார் சிதம்பரம்.

திருநாவுக்கரசருக்கு ஜனவரி கடைசி வாரமே இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் நடத்த இருந்த சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மகனுக்கு அதிக இடம் கொடுத்ததால்தான் தலைவர் பதவியை இழந்தார் திருநாவுக்கரசர்.

கே.எஸ். அழகிரி பிப்ரவரி 2ஆம் தேதி தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 3ஆம் தேதி காலை சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும்தான் முதலில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். திருநாவுக்கரசர், தன் மகனுக்குக் கொடுத்த இடத்தை ப.சிதம்பரம் இனி தன் மகனுக்குக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் இதேபோன்ற சூழல்தான் உருவாகும்” என்று முடித்தார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

திருநாவுக்கரசரின் களப்பணியில் எந்த அதிருப்தியும் இல்லாத ராகுல் காந்தி அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அமைச்சர் பதவிப் பட்டியலில் வைத்திருக்கிறார். அதனால்தான் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட மாற்றியிருக்கிறார்கள் என்கிறார்கள் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள்!

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *