~தமிழில் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் விருப்பம்!

Published On:

| By Balaji

உயர் நீதிமன்ற தீர்ப்பினை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ப.சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி ஆகியோருக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெற்ற மூன்று நீதிபதிகளின் சிறப்புகளையும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், “உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017 ஆம் ஆண்டு நான் முன்வைத்தேன். இந்த ஆலோசனையை சத்தீஸ்கர் மாநிலம் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்கள் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. உயர் நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும். கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை தமிழிலும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்” என்று கூறியவர்,

“மக்களிடம் சட்டம் குறித்த அறிவை சேர்ப்பது தற்போது தேவையாக உள்ளது. வசதி படைத்தவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்கும் பணியினை நீதித் துறை செய்ய வேண்டும். வாய்தா எனும் சட்டக் கருவி அவசர காலத்திற்கு பயன்படுவதற்கு பதிலாக வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

முன்னதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மனுநீதி சோழன், சிபி சக்கரவர்த்தி என நீதிக்காக தலைவணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த மண் தமிழ்நாடு என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அரசமைப்பின்படி நீதித்துறை, ஆட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் பத்திரிகைத் துறை ஆகிய நான்கு தூண்களும் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். தமிழகத்தில் இந்த நான்கு தூண்களும் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதை நான் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் நமது டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். மிகக் குறைவான கட்டணத்தில் தரமான சிறந்த சட்டக் கல்வியை தமிழக மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில், 11 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன” என்றும் பேசினார்.

விழா முடிந்த பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திராவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரா புறப்பட்டுச் சென்றார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share