நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
கனா திரைப்படத்தின் மூலம் பிரபலமான தர்ஷன் அடுத்ததாக அட்வெஞ்சர் பாணியில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். தனது தந்தையின் திரைப்பட விநியோக நிறுவனத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் நிர்வகித்து வந்த கீர்த்தி நாடகங்களில் பங்கேற்று நடிப்புக் கலையை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கற்றுவந்தார். இதற்கு முன் கீர்த்திக்கு கதாநாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களாக இருப்பதாகக் கூறி அதை நிராகரித்துள்ளார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக இந்தப் படம் உருவாகிவருகிறது. வனப் பகுதியில் பயணிக்கும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சண்டைக்காட்சிகளும் இடம்பெறுகிறது.
இசையமைப்பாளர்கள் விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர். சென்னை, கேரளாவின் வனப் பகுதி, மற்றும் வட இந்தியாவில் சில இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தைக் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.�,