தமிழிசை – சோபியா: சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மாணவி சோபியா விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியாவும் பயணம் செய்தார். அப்போது, தமிழிசை முன்பு பாசிச பாஜக ஒழிக” என்று சோபியா முழக்கமிட்டார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டைக் காவல் துறையினர் சோபியாவைக் கைது செய்தனர். பின்னர் சோபியாவுக்கு, தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து அக்டோபர் 3ஆம் தேதி சோபியா தனது படிப்பைத் தொடர மீண்டும் கனடா புறப்பட்டுச் சென்றார். சோபியா கனடா சென்றதும், அவருடைய தந்தை சாமி தூத்துக்குடி ஜே.எம். 2 நீதிமன்றத்தில், பாஜக தலைவர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை அக்டோபர் 26ஆம் தேதி விசாரித்த, தூத்துக்குடி நீதிமன்றம், தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது.

இதற்கிடையே, சோபியாவின் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறப்பட்டதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியாவின் தந்தை புகார் அளித்தார். இந்தப் புகாரை நேற்று (நவம்பர் 1) விசாரித்த மனித உரிமை ஆணையம், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணிகளின் பட்டியலையும், தூத்துக்குடி விமான நிலையத்தில், சம்பவத்தன்று பதிவான காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான சிசிடிவி காட்சிகளையும் வரும் நவம்பர் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க தூத்துக்குடி விமான நிலைய இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதுபோன்று, சோபியாவை கைது செய்து விசாரணை நடத்திய நேரமான, செப்டம்பர் 3ஆம் தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான சிசிடிவி காட்சிகளை மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒப்படைக்குமாறு புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share