தமிழக விவசாயிகளுக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு அங்குள்ள சீக்கியர்கள் உணவு அளித்துவருவது சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

விவசாயக் கடனை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த பல நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு இதுவரை மத்திய அரசோ, மாநில அரசோ பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில் தமிழக விவசாயிகளுடன் டெல்லியில் உள்ள சீக்கியர்கள் கைகோர்த்துள்ளனர். ஆம், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு உணவு அளிக்கும் பணியை அங்குள்ள பங்களா சாஹிப் குருத்வாரா மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழுவின் தலைவர் மன்ஜித் சிங் கூறியதாவது,” டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இந்த விவசாயிகள் பல மைல்கள் தொலைவில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இங்குள்ள மொழியும் தெரியவில்லை எங்குச் சென்று உணவு சாப்பிட வேண்டும் என்றும் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு நாங்கள் தினமும் இருவேளை உணவு வழங்குகின்றோம். அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் அளிக்கவும் தயாராகவே உள்ளோம். ஆனால் இதுவரை அவர்கள் எங்களிடம் இடம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

வறுமை , பசியில் வாடுவோருக்காக இந்த குருத்வாரா மூலம் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குச் சப்பாத்தி, தால் போன்ற உணவு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மன்ஜித் சிங் மேலும் கூறுகையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நாங்கள் முதலில் சப்பாத்தி போன்ற உணவுகளையே அளித்து வந்தோம். பின்னர் அவர்கள் அரிசி சாதத்தை விரும்புவது தெரிந்தது. இதையடுத்து தற்போது அரிசி சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் எந்த வேறுபாடும் பார்க்க மாட்டோம். விவசாயிகளுடன் நாங்கள் கூட்டு வைத்துள்ளதாகப் பலர் தெரிவித்துள்ளனர். உண்மையைக் கூற வேண்டுமென்றால் குருவின் உதவியை நாடுவோருக்கு உதவுவதே எங்கள் பணி என்று தெரிவித்தார். சீக்கிய மக்களின் இந்த தொண்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts