கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், “மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புயலுக்கு 20பேர் வரை பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பது என மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.அவரிடம் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். கஜா புயல் சேதம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த சூழ்நிலையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், திருநாவுக்கரசர்**
தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி மற்றும் போதுமான மனித சக்திகளை பயன்படுத்தி விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இழப்புகளை மதிப்பிட உடனடியாக மத்திய அரசு குழு ஒன்றினை அனுப்பி, சேதத்தினை மதிப்பிட்டு கணிசமான நிதி உதவியை மத்திய பேரழிவு நிதியிலிருந்து உடன் நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசும் இழப்புகளை மதிப்பீடு செய்ய ஆங்காங்கே குழுக்களை அமைத்து, மதிப்பிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிட்டிடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இயன்ற உதவிகளையும், பணிகளையும் ஆங்காங்கே மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
**பாமக நிறுவனர், ராமதாஸ்**
கஜா புயல் குறித்த தமிழக அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால் சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் பாதிப்புகள் இன்னும் மோசமாக இருந்திருக்கக்கூடும். களப்பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவையாகும்.பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்களை வரவழைத்து மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை. அவற்றை உடனடியாக கணக்கிட்டு பாதிக்கப் பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், பயிர்க் காப்பீட்டுத் தொகையையும் அரசு பெற்றுத்தர வேண்டும்.கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு மட்டுமின்றி, பொறுப்புள்ள குடிமகன்களுக்கும் உண்டு. எனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் ஈடுபட வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.
**சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்**
குடியிருப்புகளில் வசிக்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்யவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த மோசமான இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
**மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்**
இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.�,