ஆட்டோ, ரிக்ஷா பயண கட்டணத்தைவிட விமான பயணக் கட்டணம், தற்போது குறைவாக இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் பேச்சு தமிழக அமைச்சர்களின் பேச்சுக்களை மிஞ்சும் விதத்தில் அமைந்துள்ளது.
“முக்கொம்பு அணை உடைந்ததற்கு கண் திருஷ்டியே காரணம்”, “திறந்து விட காவிரி தண்ணி என் பாக்கெட்லயா இருக்கிறது?”, “முதலமைச்சர் இந்திரா காந்தி” போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவதில் தமிழக அமைச்சர்களுக்கு சவால்விடும் விதமாக ஜெயந்த் சின்ஹாவின் இன்றைய பேச்சு அமைந்திருப்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் விமான நிலையத்தில், புதிய உள்நாட்டு விமான முனையக் கட்டிடத்தை இன்று(செப்டம்பர் 4) திறந்துவைத்துப் பேசிய ஜெயந்த் சின்ஹா, “ஆட்டோவில் செல்வதை விட விமானக் கட்டணம் தற்போது குறைவாக உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம்? இரண்டு பேர் ஆட்டோவில் அல்லது ரிக்ஷாவில் செல்வதற்காக ரூ.10 தருகிறீர்கள். அதாவது அவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் விமானத்தால் செல்லும்போது அதே ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் ஆட்டோவைவிட, மலிவான விமான பயணத்தை மோடி ஆட்சி வழங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விமானப் போக்குவரத்துத் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2018 ஆம் ஆண்டில் விமானம் மூலம் பயணிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வரை, விமானத்தில் பயணம் செய்தது சுமார் ஆறு கோடி பேர். ஆனால் இன்று அந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள், விமானப் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். முன்பு நம் நாட்டில் 75 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று இந்தியா முழுவதும்100 விமான நிலையங்கள் உள்ளன.” என்று பேசிய சின்ஹா, டெல்லி, மும்பை கொல்கத்தா மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களுக்கு மக்கள் எளிதில் பயணம் செய்துவர ஏதுவாக மிக விரைவில் 5லிருந்து 10 விமானங்கள் எதிர்வரும் காலத்தில் கோரக்பூரிலிருந்து இயக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஜெயந்த் சின்ஹா, இறைச்சி வியாபாரி ஒருவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.�,