மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி முகம் காட்டி திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. இன்னும் தேனி, பொள்ளாச்சி, கோவை, விருதுநகர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திமுக வேட்பாளர்கள் லட்சங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளார்கள். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.வேலுசாமி, பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை விட 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிக் கோட்டை எட்டினார். இதற்கு அடுத்து, திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட 4.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக திமுக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றியை பெற்றுள்ளது.
திமுக 23/23 ( முன்னிலை 1), காங்கிரஸ் 8/9, விசிக 1/1,மார்க்சிஸ்ட் 2/2, இந்திய கம்யூனிஸ்ட் 2/2, முஸ்லிம் லீக் 1/1 , அதிமுக 1/20 ஆகிய தொகுதிகளில் வெற்றி முகம் கண்டுள்ளன. கடந்த 2014ஆம் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், 2019ஆம் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி முகத்தில் இருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து, கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதி மணி ஆகிய மூன்று பெண் வேட்பாளர்கள் மக்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். பாஜக, காங்கிரசை தொடர்ந்து அதிக தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார், பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், நாமக்கல் தொகுதியில் கொமதேக சின்ராஜ், ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
�,”