வர்த்தகச் சங்கங்களின் நாடு தழுவிய போராட்டம் தமிழகத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இன்றும் நாளையும் வர்த்தகச் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுமென்று கூறப்பட்டது. அமைப்பு சாரா போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.24,000 நிர்ணயிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தி, இன்று (ஜனவரி 8) சுமார் 20 கோடி பேர் கலந்துகொண்ட நாடு தழுவிய போராட்டம் கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். மற்ற மாநில நகரங்களில் அமைதியாகப் போராட்டம் நடைபெற்றது. கேரளத்தில் இருப்புப் பாதைகளில் அமர்ந்து, ஊழியர்கள் அரசைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். கேரளாவைத் தவிர தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென்னக மாநிலங்களில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. சென்னையில் போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின.
பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களிலும் இதே நிலைதான் நிலவியது. தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவல் துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. கர்நாடகா, கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டன. புதுச்சேரியில் தனியார் பேருந்துகளும் ஆட்டோக்களும் ஓடாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
�,