பாசிச பாஜக ஒழிக என்று கோஷம் எழுப்பியதற்காக மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
விமானத்தில் பாசிச பாஜக ஒழிக எனக் கூச்சலிட்டதாக சோபியா மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க ஜே.எம். நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதித் துறை நடுவர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டது. இதையடுத்து, மாலை 5 மணியளவில் சோபியா விடுதலை செய்யப்பட்டார்.
மாணவி சோபியாவின் கைது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி,” பாஜகவின் பாசிசம் நேற்று முழுமையாக வெளிப்பட்டுள்ளது. பாசிச பாஜக அரசுக்கு எதிராகப் பெண் ஒருவர் கோஷம் எழுப்பியதற்கு அவர் மீது பாஜகவின் தமிழக தலைவர் புகார் அளித்துள்ளார். அப்பெண்ணுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது வேறு விவகாரம்.
பாசிச பாஜக என்று கோஷமிட்டதால் ஒருவருக்கு 15 நாட்கள் சிறை விதிக்கப்படுவது அவசர நிலை இல்லை என்றால் இந்த சூழ்நிலையை வேறு எப்படி அழைப்பது. சென்னை- தூத்துக்குடி விமானத்தில் நடந்தது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலும் கூட.
கடந்த வாரம் சமூக செயற்பாட்டாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது இரண்டாவது சம்பவம். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்தே இதுதான் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல், ரோகித் வெமுலாவின் தற்கொலை, ஐஐடி மெட்ராஸில் பெரியார் வாசகர் வட்டம் அனுமதி ரத்து செய்யப்பட்டது என்று கூறிக்கொண்டே இருக்கலாம். பாஜகவை கேள்விகேட்டால் தேச விரோதி, அரசை கேள்விகேட்டால் துரோகி. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா?
**மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:**
பாஜகவையோ, நாங்கள் சார்ந்திருக்கும் அரசையோ விமர்சிக்கக் கூடாது என்று சொல்லமாட்டேன். ஜனநாயகத்தில் அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற முறையும் உள்ளது. அந்தப் பெண் தற்போதுதான் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். அவரின் பின்னணி என்ன? இயக்கங்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கைது செய்திருக்க கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். திமுக ஒரு பாசிச இயக்கம் என்று சொல்லலாம் என்று அவர்களே அனுமதி அளிக்கிறார்கள். திமுக தலைவர் முன்பாக இதுபோன்று பேசியிருந்தால் காவல்துறைக்கு செல்லும்படி அல்ல, மருத்துவமனைக்குச் செல்லும்படி ஆக்கியிருப்பார்கள். பெண் என்று மட்டும் பார்க்க வேண்டாம், பின்னணியையும் பார்க்க வேண்டும். வழக்கு போட்டது நியாயமானதே.
**திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:**
“ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி ஒழிக என்று கூறுவதற்கு கூட உரிமையில்லை என்ற நிலை பாஜக மத்தியில் ஆட்சியிலிருப்பதாலும், மாநிலத்தில் பாஜக.விற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை ஆட்சி நீடிப்பதாலும் உருவாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
“மாற்றுக் கருத்து தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பாதுகாப்பு வால்வு (safety valve)” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து ஒரு வாரம் கூட ஆவதற்குள் தமிழகத்தில் இப்படியொரு அராஜகமான, அத்துமீறிய கைதை தமிழக காவல்துறை அரங்கேற்றியது “காவி மயத்திற்கு” சில காவல்துறை அதிகாரிகளும் அடி பணிந்து கிடக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறை, மாணவி சோபியாவிற்கு ஜாமீன் அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, மாணவி சோபியா தனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்.
** மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்:**
எதற்குமே இடம், பொருள், ஏவல் உள்ளது. விமானத்தில் கோஷமிடுவதையோ, ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை அனுமதித்தால் பின்னர் எந்த தலைவர்களுமே விமான நிலையமோ, ரயில் நிலையமோ செல்ல முடியாது. பாதுகாப்பு பிரச்சினையாக முடியும். விளம்பரத்திற்காக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார். ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
**மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன்:**
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.�,