தமிழகத்தில் கொட்டப்படும் கேரள இறைச்சிக் கழிவுகள்!

Published On:

| By Balaji

கேரளாவிலிருந்து வந்த 10 டன் இறைச்சிக் கழிவை மீண்டும் கேரளாவுக்கே அனுப்ப பொள்ளாச்சி கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

கேரள மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மக்காத மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் குப்பைகளைப் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மருத்துவமனை மற்றும் இறைச்சிக் கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளைத் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் சரக்கு ஏற்றிக்கொண்டு போகும் லாரிகளில் ஏற்றி வழக்கமான வாடகையுடன் சற்று கூடுதலான பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

பணத்துக்கு ஆசைப்படும் தமிழக லாரி ஓட்டுநர்கள் இந்த குப்பைகளை ஏற்றிக்கொண்டுவந்து, கேரள மாநில எல்லையில் உள்ள தமிழக நகரங்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டிவிட்டு வந்து விடுவார்கள். இதுபோல குப்பைகளைக் கொட்டும் முக்கிய இடமாக பொள்ளாச்சி இருந்து வந்தது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்தக் குப்பை கடத்தும் முறையை அறிந்த பொள்ளாச்சி மக்களுடன் சேர்ந்து, சமூக அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து குப்பை லாரிகளைப் பிடித்துப் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரளாவிலிருந்து கழிவுகள் கொண்டுவரத் தடையும், மீறிக் கொண்டுவரும் லாரிகளைப் பறிமுதல் செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகளுடன் லாரி வந்துள்ளதாக, பொள்ளாச்சி வருவாய்க் கோட்டாட்சியர் இரவிக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வருவாய்த் துறை அலுவலர்கள் திருச்சூர் பாலக்காடு மற்றும் கோவை கோவை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு, சேரன் நகர் அருகே கடும் நாற்றத்துடன் வந்த லாரியைப் பிடித்த அதிகாரிகள் அந்த லாரியை நகராட்சிக் குப்பைக் கிடங்குக்குக் கொண்டு சென்றனர். அதில் 10 டன் அளவுக்குக் கோழி மற்றும் மீன் இறைச்சிக் கழிவுகள் அழுகிய நிலையிலிருந்தது.

அந்த லாரியில் வந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த முகமது பஷீர் (வயது 20), பட்டாம்பியைச் சேர்ந்த அர்ஜுன் (வயது 18) சிபின் (வயது 24) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களிலிருந்து, இறைச்சிக் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து, தமிழகத்தில் கொட்டிச் செல்லும் நடவடிக்கையில் அவர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

கேரளாவிலிருந்து நேராகப் பொள்ளாச்சிக்கு வராமல், நேற்று முன்தினம் இரவில் வாளையாறு சோதனைச்சாவடியை கடந்து கோவை வந்து, கோவையிலிருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு வருவது போல நடித்து பொள்ளாச்சியில் கொண்டுபோய் லாரியிலிருந்த கழிவுகளைக் கொட்ட வந்தது தெரியவந்தது.

இந்த லாரியின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால், இந்த லாரி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்ததில், கேரளக் கழிவுகளைத் தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டும் பணியில் இதுபோல பல லாரிகள் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற கோட்டாட்சியர் இரவிக்குமார் லாரியைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும், தாங்க முடியாத அளவுக்கு நாற்றம் வீசிய அந்த லாரியிலிருந்த கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டுபோய் அங்குள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டுமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாற்றமெடுத்த அந்த போலீஸ் பாதுகாப்புடன் லாரி மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த லாரியை ஆய்வு செய்ய சென்ற காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலரும் வாந்தி எடுத்துள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)

**

**

[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share