�
தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை மற்றும் தாய்ப்பால் வங்கி ஆகியவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்றும், மேலும் இது குறையும் என்றும் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில் மத்திய அரசு இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவீதமாகக் குறைந்துள்ளது என அறிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:
இந்தியாவில் 2015ஆம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 37 குழந்தைகள் என்றிருந்த இறப்பு விகிதம், 2016ஆம் ஆண்டில் 34 ஆக குறைந்தது. இதன்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தன. இது 2016ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாகக் குறைந்தது. தமிழகத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு 17 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டு குழந்தைகள் இறப்பு விகிதத்தை காட்டிலும் குறைவு.�,