தமாகா செயற்குழு: தேர்தல், தோல்வி, கூட்டணி, விவாதம்!

Published On:

| By Balaji

தமிழ் மாநில காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் நடந்தது. இதற்குமுன்னர், மே 25ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடன் தேனாம்பேட்டை தமாகா தலைமை அலுவலகத்தில் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், ஜுன் 4ம் தேதி சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 76 மாவட்டத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டங்களில் கூட்டணி சரியாக அமையாதது குறித்தும், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், தேமுதிக-வும், அதிமுக, திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். ஜுன் 4 கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த வாசன், ‘ஜுன் 11ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடக்கும்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (ஜுன் 11) நடந்த செயற்குழுக் கூட்டத்தில், ‘கூட்டணி சரியாக அமையவில்லை. இந்தக் கூட்டணியில் சேர்ந்தது தவறு. நம்மை அதிமுக சேர்த்துக்கொள்ளவில்லை. கூட்டணி சரியாக அமையாததே தோல்விக்குக் காரணம்’ என்று சில நிர்வாகிகள் சொல்லியுள்ளனர். சிலர், ‘அதிமுக சேர்த்துக்கொள்ளாதநிலையில் இந்தக் கூட்டணியும் இல்லாமல் நாம் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று சொல்லியுள்ளனர். சிலர் ‘விஜயகாந்த்தும் கூட்டணியைவிட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார்’ என்று பேசியிருக்கிறார்கள்.

அடுத்தது உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. தொடர்ந்து சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைச் செய்யவேண்டிவரும். எனவே, கூட்டணி குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று வாசனிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

பின்னர்பேசிய வாசன், ‘கூட்டணியிலிருந்து வெளியேறுவதுகுறித்து விரைவில் அறிவிக்கிறேன்’ என்று நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்வதைத் தடுப்பது, மத்திய அரசே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எடுத்துச் செயல்படவேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய விரைவான நடவடிக்கை, வேட்பாளரின் மொத்த பிரச்சாரத்துக்கும் வழிவகுத்து மொத்தச் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்று, தேர்தலை நடத்திட வழிவகை காணவேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், கட்சியை வலுப்படுத்தும்வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் எதிர்காலச் செயல்பாடுகள்பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்றார்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share