வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள் என்று நடிகை தப்ஸி தெரிவித்துள்ளார்.
ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் தப்ஸி. தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அமிதாப் பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் இவருக்குப் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலரின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தப்ஸி, ரிஷி கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘முல்க்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மன்மர்சியான்’. இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் தப்ஸி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் விளம்பரங்களில் இறங்கி இருக்கும் தப்ஸி சமீபத்தில் ஐஏஎன்எஸ் செய்திக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், “தனி மனுஷியாக எனக்குத் தோல்வியை கண்டு பயம் இல்லை. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தோல்வி ஏற்பட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்துவிடுமா என்ன? நான் மீண்டும் முயற்சி செய்வேன். என் படங்கள் தோல்வி அடைந்தால் நான் வேறு ஏதாவது செய்வேன். அத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடாது” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் தப்ஸி.
மேலும், “படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை. அந்தத் தைரியமும், நம்பிக்கையும் நான் நல்ல படங்களைத் தேர்வு செய்ய உதவுகிறது என்று நினைக்கிறேன். என் தங்கை ஷகுனுடன் சேர்ந்து உணவகம் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்த உடன் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவேன். திரைப்படத் துறைக்குச் சம்பந்தமில்லாத பிற விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன்.
எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். திரைப்படத்தைத் தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது” என்கிறார் தப்ஸி. இவர் ஏற்கனவே தனது தங்கையுடன் சேர்ந்து திருமண வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் வெட்டிங் பிளானர் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தப்ஸி மட்டும் அல்ல; பல நடிகைகளும் நடிப்பைத் தாண்டி மற்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து தற்போது இவரது நிலை பற்றி கூறும்போது, “நான் யாருடனும் அவ்வளவாகப் பழகுவது இல்லை. அதனால் திரையுலகினர் மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது எல்லாம் சிறப்பான திரைக்கதைகள் என்னைத் தேடி வருகிறது. வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். என் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது” என்று தப்ஸி கூறியுள்ளார்.�,”