(வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன் பேட்டி தொடர்ச்சி)
**வங்கிகள் தேசியமயான பொன்விழா ஆண்டில் உண்மையிலேயே பொதுத்துறை வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் பொதுமக்களிடம் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதே?**
ஐந்து தடவைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம், ஏடிஎம் மூலமாகப் பணம் எடுத்தாலும் அபராதம், வங்கியில் எடுத்தாலும் அபராதம், குறைந்த பட்ச வைப்புத் தொகை இல்லையென்றால் அபராதம் என்று சாதாரண மக்களிடம் இருந்து கட்டணக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் பெரும் பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்யும் வங்கிகள் மாணவர்களின் கல்விக் கடனை வசூலிப்பதற்குத் தனியார் நிறுவனங்களை ஏஜென்சிகளாக வைத்துக் கொண்டு மிரட்டும் கொடுமையும் தொடர்கிறது. கல்விக் கடனை வசூல் செய்யும் பொறுப்பை ஸ்டேட் பேங்க் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறது. விவசாயிகள் கடனை வசூலிக்கும் பொறுப்பு எஸ். எம். ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் திருவண்ணாமலையில் விவசாயி ஞானசேகரனின் உயிர் போனது. மதுரையில் மாணவர் லெனின் மரணம் நிகழ்ந்தது. இந்தக் கெடுபிடியைப் பெருமுதலாளிகளிடம் காண்பிக்க மாட்டேன்கிறார்கள். பொதுத் துறையிலிருந்து தனியாரை நோக்கிய பயணத்தை வேகமாகத் தொடங்கி நடத்திவருகிறார்கள். அதற்காகத்தான் இப்படி பொதுமக்கள் மீது கட்டணக் கொள்ளை நடத்தப்படுகிறது.
** தனியார் வங்கிகளின் பெருக்கம் தற்போது அதிகரிக்கிறதே ஏன்?**
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 22 தனியார் வங்கிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. பந்தன் வங்கி, ஜனா வங்கி, ரிலையன்ஸ் ஜியோ, ஓடபோன், ஏர்டெல் வங்கி என புதுப் புது தனியார் வங்கிகள் திறந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தத் தனியார் வங்கிகள் அனைத்தும் கிராமப்புற மக்கள், விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், எளியவர்களுக்கு முன்னுரிமைக் கடன் கொடுக்கமாட்டார்கள். 25% வரை வட்டி வசூலிப்பார்கள். ஈக்விடாஸ் வங்கி 25% வட்டி விதிக்கிறது. இந்த மாதிரி வங்கிகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. பொதுத்துறை செய்ய வேண்டிய பணிகளைத் தனியார் வங்கிகளிடம் கொடுத்துவிட்டு, பொதுமக்களுக்கு அதிக வட்டி விதித்து தனியார் வங்கிகள் கொள்ளை லாபம் அடைய அரசாங்கமே வழி வகை செய்கிறது. இந்தப் பயணம் என்பது எந்த நோக்கத்துக்காக பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்டதோ அதற்கு நேர் எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது. வங்கிகள் மக்களுக்காக என்ற நிலையை ஒழித்துக் கட்டவே தனியார் வங்கிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்படுகின்றன.
** கூட்டுறவு வங்கிகளின் நிலை இப்போது என்ன?**
கூட்டுறவு வங்கிகள்தான் மற்ற வங்கிகளை விடக் கிராமப்புற மக்களோடு, விவசாயிகளோடும், நகர்ப்புறத்திலுள்ள எளிய மக்களோடும் அதிக தொடர்புள்ள வங்கிகள். கூட்டுறவு வங்கிகள் இயங்குவதற்கு அரசாங்கம் மூலதனம் கொடுக்க வேண்டும். ஆனால் சமீபகாலமாகக் கூட்டுறவு வங்கிகளுக்கு போதுமான அளவு மூலதனத்தை அரசாங்கம் கொடுப்பதில்லை. எனவே கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகளின் லாபத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடி அரசில் அது நீக்கப்பட்டுவிட்டது. கூட்டுறவு வங்கிகளும் வருமான வரி கட்ட வேண்டும். இதனால் கூட்டுறவு வங்கிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அதேபோன்ற கிராம வங்கிகள் இந்தியாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமைக் கடன் 40% கொடுக்கின்றன என்றால்,இந்த கிராம வங்கிகள் 80% முன்னுரிமைக் கடன் கொடுக்கின்றன. அதாவது கிராமப்புறத்தினர், விவசாயிகள், பெண்கள், எளிய மக்களுக்காகவே 80% கடனை இந்த வங்கிகள் கொடுக்கின்றன. அதனால்தான் இவற்றுக்குக் கிராம வங்கிகள் என்று பெயர். இந்த கிராம வங்கிகளிலும் 49% தனியாரிடம் கொடுக்க மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. அப்படி கிராம வங்கிகளும் தனியாருக்குப் போய்விட்டால் கிராம வங்கிகளின் இலட்சியமான 90% முன்னுரிமைக் கடன் என்பதில் பாதிக்குக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடும். மேலும் ஏழை எளியவர்கள் மீது அதிக வட்டி சுமத்தப்படும், எப்போது தனியார் ஆதிக்கம் உள்ளே வருகிறதோ அப்போதே லாப நோக்கத்துக்கு உயிரளிக்கப்பட்டு சேவை மனப்பான்மை கொல்லப்படும். 1975 ல் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்ட நோக்கமே இப்போது சிதைக்கப்பட்டு வருகிறது.
**பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்கவே முடியாதா?**
இவ்வளவையும் மீறி பொதுத்துறை வங்கிகள்தான் சாதாரண மக்களுக்கான வங்கிகளாக நின்று கொண்டிருக்கின்றன. அது கல்விக்கடனாக இருக்கட்டும், வீடு கட்டும் கடனாக இருக்கட்டும், தொழில் முனைவோருக்கான கடனாக இருக்கட்டும். இன்னொரு பக்கம் பொதுத்துறை தன்மையைக் காப்பாற்ற வேண்டும். சாதாரண மக்களுக்குப் போடும் அபராதத்தை நீக்க வெண்டும், பெரும் முதலாளிகளின் கடனை வசூலிக்கும் சட்டத்தைக் கறாராக இயற்றசெய்ய வேண்டும். பெருமுதலாளிகள் ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை கட்டமுடியவில்லை என்றால், அவர்களின் இன்னொரு நிறுவனத்திடம் இருந்து அதை வசூலிக்க வேண்டும். ஆனால் தங்களிடம் இருக்கும் பல நிறுவனங்களில் ஒன்றின் பெயரில் கடன் வாங்கிவிட்டு, அதை நட்டக் கணக்கில் காட்டி அந்தப் பணத்தை தங்களது இன்னொரு நிறுவனத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த தொகையை வங்கி திரும்பப் பெற முடியவில்லை. இது சாதாரண மக்களிடம் இருந்து அபராதம் போன்ற தொகைகளாக வசூலிக்கப்படுகிறது. பெருமுதலாளிகளிடம் கடனை கறாராக வசூலிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டால், சாதாரண மக்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி வங்கி சேவையை வழங்க முடியும்.
வங்கியில் போட்டிருக்கும் பணம் ஊழியர்கள் பணமோ அரசுப் பணமோ கிடையாது. சாதாரண மக்களின் பத்தாயிரம், இருபதாயிரம், ஒருலட்சம் என போட்டு வைத்த பணம். எனவே மக்கள் சேமிப்பு மக்களுக்குத்தான் பயன்பட வேண்டும். அது பணக்காரர்களுக்குப் பயன்படக் கூடாது. பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும். பொதுத் துறை வங்கிகளின் பொதுத்துறைத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக மக்களும், வங்கி ஊழியர்களும் தொடர்ந்து போராட வேண்டும்” என்று நிறைவு செய்தார் சி.பி. கிருஷ்ணன்.
**-ஆரா**
[இந்திய வங்கிகள்: நேற்றும், இன்றும்!](https://minnambalam.com/k/2019/07/19/27)
[நரசிம்மராவ் முதல் நரேந்திர மோடி வரை: வங்கிகள் திசைமாறிய வரலாறு!](https://minnambalam.com/k/2019/07/19/47)
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”