தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு!

public

தமிழகத்தில், 4,500 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கத் தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (மார்ச் 22) உத்தரவிட்டது.

மதுரைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் கே.ஹக்கீம், என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க, தமிழக அரசு, குழு அமைத்தது. அப்பள்ளிகளில், 2018-19 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். எனவே, கட்டண நிர்ணயக்குழு, 2018-21ம் ஆண்டுகளுக்கு, கட்டண விபரங்களை வெளியிட வேண்டும். அதுவரை அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் உள்ள 10,000 தனியார் பள்ளிகளில், 5,500 பள்ளிகளுக்கு, 2017-20ம் ஆண்டுகளுக்கு குழு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குழுவின் இணையதளத்தில், ஒருவாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மீதமுள்ள 4,500 பள்ளிகளுக்கு, 2018-21ம் ஆண்டு வரை, கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள், 4,500 பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயித்து, அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைப்படி, தனியார் பள்ளிகளுக்கு அதன் அடிப்படை வசதிகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு தலைமையில் தமிழக அரசு ஆணையத்தை அமைத்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். அவர், 2016 – 17ம் கல்வி ஆண்டு வரை 12,000 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயித்திருந்தார். ஆனால், அவர் ஓய்வுபெற்ற பின்னர்த் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்பக் கட்டணம் வசூலித்து வந்தது. அதைத் தொடர்ந்து, கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி நியமிக்கப்பட்டார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை எல்.கே.ஜி- யில் சேர்த்துக்கொள்ளவும் அரசு இடம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *