தனித்துப் போட்டியில்லை, கூட்டணிதான்: பாமக பொதுக்குழு !
வர இருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க டாக்டர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து நேற்றும் இன்றும் கோவையில் கூடிய பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பாமக வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை, கூட்டணிதான் என்பது உறுதியாகியுள்ளது.
இன்று கூடிய பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் தீர்மானத்தில்,
“பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தொடர்வண்டித்துறை இணையமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பா.ம.க. வலிமையாக இருந்த போது தான் ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.
இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாட்டாளி மக்கள் கட்சி வகுத்து வருகிறது. இதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு வழங்குகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாமக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி என்று முடிவெடுத்துள்ளது.
மேலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவுக்கு இரங்கல், மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், கொங்கு மண்டலத்தில் தொழில்துறையினருக்கு ஊக்குவிப்புத் திட்டம் தேவை, ஸ்டெர்லைட் மூட தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.�,