�
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளி தப்பியோடிய சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் சோலங்கி. ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 2015ஆம் ஆண்டு இவர் மீது ராஜ்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை பர்வானி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் சோலங்கி ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று (ஜூலை 31) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் சோலங்கிக்கு 7,000 ரூபாய் அபராதமும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தீர்ப்பினை வாசித்து முடித்ததும், நீதிமன்ற அறையில் இருந்து தப்பியோடினார் விஜய் சோலங்கி. அங்கிருந்த போலீசாரால், அவரைப் பிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக, நீதிமன்ற ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, தப்பியோடிய விஜய் சோலங்கியைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.�,