தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்: குமரி காங்கிரஸ் கலாட்டா

Published On:

| By Balaji

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் முன்னிலையிலேயே, காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் ரத்தக் களறியாகியிருக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டே மௌன சாட்சியாக நின்றிருக்கிறார் சஞ்சய் தத்.

நாகர்கோவிலில் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டும், வர இருக்கும் நகர உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனையும் தெரிவிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. மேலிடப் பார்வையாளரும் அகில இந்திய செயலாளருமான சஞ்சய் தத், குமரி எம்பி வசந்தகுமார், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாநில மீனவர் அணி தலைவர் சபீன் பேசும்போது, “வசந்தகுமாருக்கு மக்களவைத் தேர்தலில் அனைத்து மீனவ மக்களும் வாக்களித்தனர். பொன்.ராதாகிருஷ்ணன் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அனைத்து கிறிஸ்துவ மக்களும் வசந்தகுமாருக்கு வாக்களித்தனர். ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை 27 மீனவர் கிராமங்களும் உங்களுக்குதான் வாக்களிச்சது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மீனவர்களுக்கு உரிய வாய்ப்பே வழங்கப்படவில்லை. வாய்ப்பளிக்கப்பட்ட மீனவர்களையும் உள்ளடி வேலை செய்து தோற்கடித்துவிட்டார்கள். வசந்தகுமார் பாரபட்சம் பார்க்கிறார்” என்று பேசிக் கொண்டே போக கூட்டத்தில் இருந்த வசந்தகுமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இடையில் தங்கபாலு ஆதரவாளரான ராபர்ட் புரூஸும் இது தொடர்பாக பேசினார்.

அப்போது எழுந்த வசந்தகுமார், “எனக்கு 1600 கோடி ரூபாய் சொத்து இருக்கு. இந்த அரசியலால எனக்கு பைசா லாபம் கிடையாது. புறம்போக்கெல்லாம் என்னைப் பத்தி பொதுவெளியில பேசறதை அனுமதிக்க முடியாது. என்கிட்ட குறை இருந்தா ஆபீசுக்கு வந்து சொல்லு. இப்படியா சொல்லுவது? என்னைப் பத்தி மக்களுக்குத் தெரியும். தொகுதி மேம்பாட்டு நிதி சேங்ஷன் ஆகாதபோதும் என் பணத்தைப் போட்டு வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்” என்று சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் சபீனை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். அவர் மேடையில் இருந்து இறங்க முயல, அங்கே ஒரு தூணுக்குப் பக்கத்தில் வைத்து அவரை சரமாரியாக குத்தினர். மோதிரங்களால் முகத்தில் குத்த நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. சபின் ரத்தம் வழிய தப்பி ஓடினார். அதை சஞ்சய் தத் பார்த்துக் கொண்டே நின்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சபின்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share