இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போடுவதில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தட்டம்மை நோய்க்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்ற நிலையில், 2 கோடியே 8 லட்சம் பேர் தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
நைஜீரியாவில் 33 லட்சம் பேரும், இந்தியாவில் 29 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 20 லட்சம் பேரும், இந்தோனேசியாவில் 12 லட்சம் பேரும், எத்தியோப்பியாவில் 9 லட்சம் பேரும், காங்கோவில் 7 லட்சம் பேரும் தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை.
2000 ஆம் ஆண்டில் தட்டம்மைக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில், தட்டம்மைக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 84 சதவிகிதம் குறைந்து 90 ஆயிரமானது. தடுப்பூசி போடுவதன் மூலம் ஆண்டுக்கு 13 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இதை இன்னும் தீவிரப்படுத்தினால் தட்டம்மை இல்லாத உலகத்தை உருவாக்கி விடலாம் என தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு அமைப்பு தலைவர் ராபர்ட் லிங்கிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தட்டம்மை மற்றும் ரூபெல்லா அமைப்பு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
கடந்த இருபது ஆண்டுகளாகத் தட்டம்மை தடுப்பூசியால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு பலியாகும் எண்ணிக்கையைப் பூஜ்ஜியமாக்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பூசி போட்டால்தான் இதை முற்றிலும் ஒழிக்க முடியும் என உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜீன் மேரி ஒக்வோ பீலே தெரிவித்துள்ளார்.�,