அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் விற்பனை பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் 9,760 வீட்டுமனைகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்வதால், விவசாயமும் விளைநிலங்களும் அழிந்துவருகின்றன. இதனால் வருங்காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பும் உணவுப் பஞ்சமும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் இப்படி விற்பனை செய்யப்படும் வீட்டுமனைகள் அங்கீகாரமற்றவை. இத்தகைய சட்ட விரோதமான வீட்டுமனை விற்பனையை தடைசெய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையெதிர்த்து, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய நீதிபதி எஸ்.கே.கவுல், தமிழக அரசு இதுதொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யும் வரை தடையை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி டெல்லி சென்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ரமேஷ் நியமிக்கப்பட்டார்.
பின்னர், அங்கீகாரமற்ற வீட்டுமனை விற்பனை பத்திரப்பதிவு தடை தொடர்பான வழக்கு, கடந்த மார்ச் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த தடை உத்தரவால் ஏழை வீட்டுமனை முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு, செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையில் சிறு மாற்றம் செய்து, தமிழக அரசின் சட்டத் திருத்தப்படி, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. அதற்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக, தமிழக அரசு புதிதாக வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்தே நீதிமன்றம் முடிவு செய்யும். தமிழக அரசு இதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி, அதற்கான கொள்கை முடிவை ஏப்ரல் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனை தடையை தளர்த்தியது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரையறை செய்வது தொடர்பாக, அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, புதிய வரைவு விதிகள் உருவாக்கி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று வாதிட்டார். ஆனாலும் தொடர்ந்து அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் விற்பனை தொடர்பான புதிய விதிகள் வரையறை செய்யப்படாததால் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவு தடை தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் விற்பனை தொடர்பாக தமிழக அரசின் புதிய வரைவு விதிமுறைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் புதிய வரைவு விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் வரை அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தளர்வை ரத்துசெய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மே 4 மற்றும் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதனிடையே, அங்கீகாரமற்ற வீட்டுமனை பத்திரப்பதிவு தடைக்காலத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றதாக எழுந்த புகாரின்பேரில், பத்திரப்பதிவு தடைக்காலத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மே 4ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐஜி ஹன்ஸ்ராஜ் வர்மா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளுக்கு தடை விதிக்கப்பட்ட செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரையிலான காலத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 9 பத்திரப் பதிவுத்துறை மண்டலங்களில் மொத்தம் 9,760 அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,581 அங்கீகாரமாற்ற வீட்டுமனைகள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,