ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்துவோர் தொடர்பான தரவுகள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான பல செயலிகளில் ஒன்று ட்ரூகாலர். யார் என்று தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, எதிர்முனையில் இருப்பவர் யார் என்பதை அறிய இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்தாலும், சம்பந்தப்பட்டவரின் தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி தி எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 60-70 சதவீத மக்கள் ட்ரூகாலர் பயனாளர்களாக உள்ளனர். அதாவது 14 கோடி வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப் எனும் தளத்தில் 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த பயனாளர்களின் விவரங்கள் 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சமீபகாலமாகவே, மக்களிடம் இணையத்தில் தம்முடைய தரவுகள் திருடப்படுவதாக அச்சம் நிலவி வருகிறது. ட்ரூகாலர் வாடிக்கையாளர்களின் முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உட்படப் பல தகவல்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அந்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
“சமீபகாலமாக எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தரவுகளைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். தற்போது இது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. நாங்கள் ஒருபோதும் மக்களின் நிதிப் பரிவர்த்தனைகள், வங்கி விவரங்கள் குறித்த தகவல்களை எடுப்பதில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது வெளியான தகவல்கள் ட்ரூகாலர் வாடிக்கையாளர்களின் தரவுகளுடன் பொருந்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் செயல்படுவோம்” என்று ட்ரூகாலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,