ட்ரம்ப் மகள் வருகை: தெரு நாய்களைக் கொல்லும் மாநகராட்சி?

Published On:

| By Balaji

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளில் முதல் கட்டமாக பிச்சைக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நகரத்தைச் சுத்தப்படுத்துவதற்காகத் தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு நவம்பர் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்துகொள்கிறார். இதனால் ஹைதராபாத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.

இவாங்கா ட்ரம்ப் வருகையையொட்டி அந்நகரில் தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்களும், முன்னாள் ப்ளூ கிராஸ் உறுப்பினர் ஒருவரும் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். கடந்த24 மணி நேரத்தில் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎம்ஹச்சி) பல நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஜ்ரா ஹில்ஸ் , ஜூபிளி ஹில்ஸ் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து தெரு நாய்கள் காணாமல் போவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவாங்கா ட்ரம்பின் ஒரு நாள் வருகைக்காக, அப்பாவி விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்றும் விஷம் மூலம் விலங்குகளைக் கொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் சமூக ஊடகங்கள் மூலம் நகராட்சியின் தலைமைக் கால்நடை அதிகாரியிடம், விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தெரு நாய்களைக் கொள்வதால் நகரம் தூய்மையாகும் என்பதில்லை. அவை நகரத்தை வெறுமைப்படுத்தும். எனவே இந்தப் பைத்தியக்கார தனத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரபல கால்நடை மருத்துவர் டாக்டர் வெங்கடேஸ்வர ரெட்டி, “மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்காகவே பிடித்துச் செல்லப்படுகின்றன. சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பிடிக்கப்பட்ட இடத்திற்கே கொண்டுசென்று விடப்படும். நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதாகக் கூறப்படுவதில் ஒரு சதவிகிதம்கூட உண்மையில்லை“ என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share