3
டொனால்டு ட்ரம்பை ‘பைத்தியம்’ என விமர்சித்திருக்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில், தன்னுடைய ‘நாட் ரியாலிட்டி டிவி’ (Not Reality TV) ஆவணப்படத்தை ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் வெளியிட்ட ஜேம்ஸ் கேமரூன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் ஆகியவை சுற்றுச்சுழலை பெருவாரியாக பாதித்திருக்கும் வேளையில், அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், ‘பருவநிலை மாற்றம் (climate change) என ஒன்று இல்லவே இல்லை’ எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய ஜேம்ஸ் கேமரூன், ‘பருவநிலை மாற்றத்துக்குப் பின்னே இருக்கும் அறிவியலை புரிந்துகொள்ளாமல் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை கிழித்து வீசுவேன் என டிரம்ப் சொல்லிக்கொண்டிருப்பது முட்டாள்த்தனமானது மற்றும் அபாயகரமானது’ எனக் கூறினார். இக்கூட்டத்தில் ஜேம்ஸ் கேமரூனின் ஆவணப்படத்தை அறிமுகப்படுத்திவைத்த சிகோர்னி வீவர், ‘பயிர்கள் விளைவதில்லை, விலைவாசி உயர்கிறது, நம் பிள்ளைகள் அபாயகரமான சூழலில் இருக்கிறார்கள்’ எனப் பேசினார்.
‘பருவநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை உணர்த்தவே இந்தப் படத்தை தயாரித்தோம் – அது நேரடியாக தினமும் எப்படி கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது என்பதை காட்டுவதற்காக செய்தோம். நான் முன்னரே சொன்னதுபோல, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இயங்கியதுபோலவே இப்போது வேகமாக இயங்க வேண்டும்’ என ஜேம்ஸ் கேமரூன் பேசினார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார், டைட்டானிக் படங்கள் உலகம் முழுதுமே பிரபலம்.�,