டெல்லி க்ரைம்: நிர்பயா கொலை வழக்கின் த்ரில் பயணம்!

public

கேபிள் சங்கர்

பொள்ளாச்சி சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதும், போலீஸார் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கேஸை ஒன்றுமில்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்றும், ஆளுங்கட்சி இவர்களைக் காப்பாற்ற நினைக்கிறது என்றும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பேசுகின்றன. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளோ தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் மிரட்டல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மீடியாவில் பரபரப்பாக்கப்பட்ட பல வழக்குகளில் குற்றவாளிகள் வெளிவந்ததும் உண்டு. தண்டனைக்குள்ளானதும் உண்டு. நல்லதோ கெட்டதோ, போலீஸ்தான் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும். சமயங்களில் சம்பந்தமேயில்லாமல் சில பல அதிகாரிகளின் தலை உருளவும் செய்யும். எல்லா விஷயங்களுக்கும் இன்னொரு பக்கமிருக்கும் என்பதைப் போலவே இந்த வழக்குகளுக்கும் இருக்கும்.

‘டெல்லி க்ரைம்’ என்னும் வெப் சீரிஸ் அதைப் பற்றித்தான் பேசுகிறது. 2012 டிசம்பரில் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு பற்றியதுதான் இந்த சீரிஸ். ஆனால் இது போலீஸ் பக்கம் நின்று பேசுகிறது. நிஜத்தில் ஐந்தே நாட்களில் மொத்த குற்றவாளிகளையும் பிடித்து கோர்ட்டில் நிறுத்தியிருக்கிறார்கள் போலீஸார். அவர்கள் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற பல வழக்குகளில் அவர்களுடைய நேர்மையான உழைப்பு இருக்கிறது என்பதை இந்த சீரிஸ் உணர்த்துகிறது.

நிர்பயாவும் அவளது காதலனும் குற்றுயிரும் கொலையுயிருமாய் டெல்லி ஏர்போர்ட் பைபாஸில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது. பெண் டிஜிபி வர்திகாவின் முனைப்பில் கேஸ் விசாரிக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்திருக்கும் இவருக்கு இன்னொரு பிரச்சினை, பள்ளி இறுதியாண்டு படிக்கும் மகள். அவளுக்கு டெல்லி பிடிக்கவில்லை. மெட்ரோவில் மார்பை முறைக்கும் ஆண்களைப் பிடிக்கவில்லை. டெல்லியே மோசம், நான் வெளிநாடு போய் படிக்கப்போகிறேன் என்கிறாள். அவளுடய பேச்சுக்கு ஏற்றாற்போல இந்த கேஸ். ஐந்து நாட்கள் தொடர்ந்து வர்திகாவும், அவரது சகாக்களும் படும் பாடு.

எப்படி கேஸை ஆராய ஆரம்பித்து, அத்தனை குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தினார்கள் என்பதை மிக நுணுக்கமாய், சரியான விவரணையோடு காட்டுகிறது இந்த சீரிஸ். போலீஸுக்குப் பின்னே உள்ள பொருளாதாரக் காரணிகள், நிர்வாக ஆமைத்தனம், உயரதிகாரிகள் தலையீடு, அரசியல், மீடியா நெருக்கடிகள் அத்தனையும் சேர்ந்து அவர்கள் அடையும் மன உளைச்சலையும் காட்டுகிறது. இவை அத்தனையையும் மீறி இந்த கேஸை எப்படித் துப்பு துலக்கினார்கள் என்பதை ரியல் டைம் ஸ்பீடில் சொல்லியிருக்கிறார்கள்.

நிர்பயாவுக்கான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்குச் சொல்லப்படும் அரசியல் காரணம், டெல்லியின் சட்டம் ஒழுங்கு முதலமைச்சர் கையில் இருந்தால் இன்னும் திறம்படச் செயல்பட முடியும் என்கிற கோரிக்கையோடு உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் சுயநல முதலமைச்சர், புதியதாய் ஐபிஎஸ் ட்ரையினிங் முடித்துவிட்டு சண்டிகரிலிருந்து வரும் நிம்மி, போலீஸ் குடும்பம் என்றாலே பெண் எடுக்க வர மாட்டார்கள் என்று இத்தனை களேபரங்களுக்கு இடையே பெண்ணுக்கு வரன் தேடும் இன்ஸ்பெக்டர், காலில் அடிபட்டும் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி, டீச்சர் ஆக நினைத்து போலீஸாய் வேலை செய்யும் இன்னொரு இன்ஸ்பெக்டர் எனக் கதையோடு நம்மைப் பயணிக்கவைக்கும் கேரக்டர் விவரணைகள் நிறையவே உள்ளன.

போலீஸ் ஸ்டேஷனுக்கு மின்சாரக் கட்டணம் கட்டாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அளவுக்குப் போவதாக இரு காட்சிகள் வருகின்றன. காவல் துறைக்கு ஒதுக்கும் நிதி எந்த அளவில் இருக்கிறது என்பதை இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் போலீசார் எல்லா மட்டங்களிலும் இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை அரசியலாக்கி, போலீஸில் யாரையாவது கள பலி கொடுத்தே ஆக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஆளுங்கட்சி, நேர்மையாய் வேலை பார்க்கும் போலீஸ் டீமின் நம்பிக்கையைக் குலைக்கிறது.

குற்றம் செய்தவர்கள் ஏழை பாழையாய் இருப்பதால்தான் அத்தனை ஈஸியாக பிடித்துவிட்டார்கள். இதே பணக்காரர்களாக இருந்தால் இப்படி சுறுசுறுப்பாக நடந்திருக்குமா என்று கேட்பீர்களானால் அது உண்மைதான். அதை ஒரு காட்சியில் இன்ஸ்பெக்டரே சொல்கிறார்: “நல்லவேளை பணக்காரனுடைய, அல்லது அரசியல்வாதிகளின் பையன்கள் யாரும் இல்லை.”

மீடியா ஒரு பக்கம் நெருக்கடி தருகிறது என்றால், உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தில் குதித்து எமோஷனலாகும் இளைஞர்களும் நெருக்கடியைக் கூட்டுகிறார்கள். அரசு மற்றும் அதிகாரிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த அவநம்பிக்கையை மீடியா பயன்படுத்திக்கொள்கிறது.

இந்த சீரிஸின் இயக்குநர் ரிச்சி மெகத்தா. இவர் கன்னடிய எழுத்தாளர், இயக்குநர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்த கேஸை ஆராய்ந்து திரைப்படமாக எடுக்க நினைத்து பின்பு அத்தனை விஷயங்களையும் சொல்ல சீரிஸ்தான் சரி என இறங்கியிருக்கிறார். வசைச் சொற்கள் அதிகம் புழங்கும் போலீஸ் உலகில்கூட அடக்கி வாசித்திருக்கிறார். பெண் அதிகாரி உச்சப்பட்ட கோபத்தில் கத்தும் இடத்தில் மட்டும் கெட்ட வார்த்தை வருகிறது. இயக்குநர் நினைத்திருந்தால் விசாரணை என்கிற வல்லுறவைக் காட்சிப்படுத்திப் படத்தின் அதிர்ச்சி மதிப்பைக் கூட்டியிருக்கலாம். ஆனால், அது கொடுக்கக்கூடிய அதிர்ச்சியை, பரிதாபத்தை வசனங்கள் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் கொண்டுவந்திருக்கிறார்.

போலீசார் ராஜஸ்தானுக்கு விமானத்தில் பயணம் செய்கிறார்கள். இந்த கேஸை சீக்கிரம் முடிக்க ஆகும் பெரும்பாலான செலவுகள் அரசின் நிதி ஆதாரத்தை மீறி உயரதிகாரிகளின் கைக்காசில்தான் நடக்கிறது. ஏன் போலீசால் நேர்மையாய் செயலாற்ற முடிவதில்லை என்று முதல்வர் முன்னால் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் கமிஷனர் சொல்லும் காட்சி அப்பட்டமான நிதர்சனம்.

வரிகாவாக நடித்திருக்கும் ஷயாலியின் நடிப்பு க்ளாஸ். சூழ்ச்சி, ஏமாற்றம், கோபம், பதற்றம், பெண் மீதான பாசம் என எல்லா உணர்வுகளையும் அநாயாசமாய் வெளிப்படுத்துகிறார். உடன் நடித்த போலீஸ்காரர்களும் நன்கு நடித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட்டிடம் தனக்கு நடந்த கொடுமையைத் தெளிவாய் விளக்கும் காட்சி நம் மனக்கண்ணின் முன் விரியும்போது உண்மையான நிர்பயா அனுபவித்த வலி நம்மையும் தாக்குகிறது.

அதுதான் டெல்லி க்ரைம் சீரிஸின் வெற்றி.

[வாழ்க்கைக்கான புன்னகை](https://www.minnambalam.com/k/2019/03/20/7)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *