டெல்லியில் சாலை விபத்தில் சிக்கி தலையில் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருத்துவர் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
டெல்லியில் அதிக மக்கள் வாழும் பகுதியில் உள்ள சுஷ்ருதா ட்ராமா மருத்துவமனையில் விஜேந்திர தியாகி என்பவர், விபத்தில் சிக்கி தலையிலும் உடலிலும் காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பிரிவில் தியாகி என்ற மற்றொருவரும் காலில் காயங்களுடன் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 19) அன்று மூத்த மருத்துவர் ஒருவர், அவசர சிகிச்சை அறைக்குள் நுழைந்து, தலையில் அடிப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த விஜேந்திர தியாகிக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். இதனால் தன்னுடைய சுயநினைவை இழந்தார் விஜேந்திர தியாகி. பின்னர் அவருக்குக் காலில் அறுவை சிகிச்சையை அந்த மூத்த மருத்துவர் மேற்கொண்டதாக அம்மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் அஜய் பாஹ் தெரிவித்தார்.
தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த தியாகிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்ததும், முன்பு செய்த தவறான அறுவை சிகிச்சைக்கு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
‘வியாழக்கிழமை அன்று 9.30 மணியளவில் அறுவை சிகிச்சை நடந்தது’ என்று தியாகி மகன் அன்கிட் தெரிவித்தார். ஆனால், தியாகியின் குடும்பத்தினர் அந்த மருத்துவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.
‘இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் மூத்த மருத்துவர் தவறுதலாக மாற்றி அறுவை சிகிச்சை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்த மருத்துவரை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளோம். அவர் மற்ற மருத்துவர்களின் மேற்பார்வையில் பணிபுரிவார். மேலும் மூத்த மருத்துவர் எந்தவொரு அறுவை சிகிச்சை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
�,”