டெல்டா விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்: டி.ஆர்.பாலு

Published On:

| By Balaji

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 11) மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது உரையாற்றிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “2019ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்தபோது, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்களுக்கு உறுதியளித்தார். தற்போது அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால் முதல்வரின் அறிவிப்பு நடக்காமல் போய்விடும்” என்று தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களின் பிரச்சினைகளைப் பற்றி தான் நன்றாகவே அறிவேன் என்று குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, “டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் நடைபெறவுள்ள பெட்ரோலியத் துறை சார்ந்த பணிகளும், பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனப் பணிகளும், கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட பணிகளை உடனடியாக நிறுத்தவும், அதைத் திரும்பப் பெறவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்து உரிய முயற்சி எடுத்துக் கூறி, டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share