மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த புதிய முயற்சியாக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் 1.53 லட்சமாகக் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், டெங்கு பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என இரண்டிலுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் மட்டும் 1.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 226 பேர் இறந்துள்ளனர். இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 10 ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு சார்பில் டெங்குவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்த முடியும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு மாணவரான ராஜீவ் கோஷ் பிரத்யேகமான ஆளில்லா விமானம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆளில்லா விமானத்தை உயரமான கட்டடங்கள், வீடுகள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பறக்கவிட்டு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்க முடியும் என்று மாநகராட்சி மேயர் அசோக் கூறியுள்ளார்.
�,