ரஜினி ரஞ்சித்துடன் இரண்டாவதாக இணையும் ‘தலைவர் 161’ திரைப்படத்துக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைதான் இது. ரஜினி, ரஞ்சித்தின் கதைக்கு ஓகே. சொல்லி பட வேலைகள் தொடங்கியதிலிருந்தே பேசப்பட்டு வந்த செய்திக்கான ரியாக்ஷன் இப்போது வந்திருக்கிறது. ரஜினி டான் கதாபாத்திரத்தில் நடிப்பதைவிட சந்தோஷம் தரும் ஒரு மேட்டர் அவரது ரசிகர்களுக்கு வேறு இருக்காது. ஆனால், அது எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்காது அல்லவா? முக்கியமாக அந்த டான் கேரக்டர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு.
ரஜினி, அவரது 161ஆவது படத்தில் நடிக்கவிருப்பது தெற்கு மும்பையின் முடிசூடா மன்னன், ஸ்டைல் ஐகான் ஹாஜி மஸ்தான் அல்லது சுல்தான் மிஸ்ரா என்றழைக்கப்படும் ஹாஜி மஸ்தான் மிஸ்ரா அவர்களுடைய கேரக்டரில்தான். சுல்தான் மிஸ்ராவை கேங்ஸ்டர் என்று அழைப்பார்கள். தயாரிப்பாளர் என்று அழைப்பார்கள் அல்லது அரசியல்வாதி என்பதால் தலைவரே என்றும் அழைப்பார்கள். இதற்கான பணமெல்லாம் கடத்தல் மூலமாக அவருக்குக் கிடைத்தது என்பதுதான் பரவலான பேச்சு. இதை அடிப்படையாகக் கொண்டு உருவாவதுதான் ரஜினி – ரஞ்சித் இணைந்துள்ள ‘தலைவர் 161’ திரைப்படம். ஆனால், சுல்தான் மிஸ்ராவின் வளர்ப்பு மகனான சுந்தர் ஷேகர் என்பவர், நேற்று (12.05.17) ஹாஜி மஸ்தான் மிஸ்ரா அவர்களை ஒரு கடத்தல்காரராகத் திரைப்படத்தில் காட்டக் கூடாது என்று ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில்…
**மறைந்த ஸ்ரீ ஹாஜி மஸ்தான் மிஸ்ரா அவர்களின் வளர்ப்பு மகனும், Bharatiya Minorities Suraksha Mahasangh கட்சியின் நிறுவனருமாகிய நான் சுரேஷ் ஷேகர். சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தமிழ் டைம்ஸ் உட்பட்ட சில பிரின்ட் மீடியாக்கள் மூலமாக நீங்கள், இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து என் தந்தை ஹாஜி மஸ்தான் மிஸ்ராவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி படம் எடுக்கிறீர்கள் என அறிந்துகொண்டதால் இந்த நோட்டீஸை அனுப்புகிறேன்.**
**இதன்படி நீங்கள் தேசமே அறிந்த ஒரு அரசியல் தலைவரைப் பற்றியும், எனது தந்தையைப் பற்றியும் ஸ்மக்லர் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான் என சொல்லப்போகிறீர்கள். இதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது. அத்துடன் என் தந்தையைத் தவறாக சித்திரிப்பதற்காக வன்மையாகக் கண்டிக்கிறேன்.**
**நீங்கள் குறிப்பிடும் ஸ்மக்லிங் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான் போன்ற செயல்பாடுகளுக்காக, மறைந்த ஹாஜி மஸ்தான் மிஸ்ரா இதுவரை நீதியின்படி எந்த இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படாதவர். எனவே, அவரை ஸ்மக்லர் என்றோ அண்டர்வேர்ல்ட் டான் என்றோ சித்திரிக்க முயல்வது ஆட்சேபனைக்குரியது.**
**அத்துடன் நாங்கள் இருவரும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். என் சிறு வயதிலிருந்தே நான் அவருடன் இருக்கிறேன். அவர் என்னைத் தனது சொந்த மகனாகவே வளர்த்தாலும், என் மதத்திலிருந்து என்னை மாறச்சொல்லி வற்புறுத்தியதே இல்லை. நான் அவருடன் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல்வேன். வேறு யாருக்கும் என்னைவிட அவரை நன்றாக நெருக்கமாகத் தெரிவதற்கு வழியில்லை. உண்மையாகவே, மறைந்த ஸ்ரீ ஹாஜி மஸ்தான் மிஸ்ரா அவர்களின் வாழ்க்கையைப் படமாக மாற்ற முயற்சித்தால், அவரது உண்மையான வாழ்க்கைக்கதையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். சொல்லப்போனால், நானும் அவரது வாழ்க்கைக்கதையை பயோபிக் ஆக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். நானும் ஒரு தயாரிப்பாளர் தான். நானும் Indian Motion Picture Producers Associationஇல் பதிவு செய்த வாழ்நாள் மெம்பர் தான்.**
**மேலும், ஹாஜி மஸ்தான் மிஸ்ராவின் பின்னால் மிகப்பெரிய அரசியல் கட்சி இருக்கிறது. அவரை நீங்கள் இப்படி சித்திரிப்பதை அறிந்து Bharatiya Minorities Suraksha Mahasangh கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். நீங்கள் ஹாஜி மஸ்தான் மிஸ்ரா அவர்களை ஸ்மக்லர் அல்லது அண்டர்வேர்ல்ட் டான் என தவறாக சித்திரிக்க முயற்சி செய்யும்பட்சத்தில் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை. இவையெல்லாம் நடக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதனால் ஏற்படும் பண இழப்புக்கும், பின்விளைவுகளுக்கும் நீங்கள் தான் பொறுப்பு என்பதை கவனத்தில் கொள்ளவும்.**
சுரேஷ் ஷேகர், ஹாஜி மஸ்தான் மீது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட எந்த வழக்கும் இல்லை என்பது உண்மையாகிற நிலையில், அவர் குறிப்பிட்டிருப்பது போலவே ரஜினி – ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷுக்கு இவரால் பல பிரச்னைகள் உருவாகும். அதற்கு, சுரேஷ் ஷேகரிடம் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் என்ற ஆதாரம் இருந்தால் போதும். கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் ஹாஜி மஸ்தான் தொடங்கிய பாரதிய முஸ்லிம் சுரக்ஷா மஹாசங் (இதன் பெயர் ஹாஜி மஸ்தான் இறப்பதற்கு முன்பு 1992இல் Bharatiya Minorities Suraksha Mahasangh என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற அரசியல் கட்சியை, 1994இல் அவர் இறந்ததிலிருந்து சுரேஷ் ஷேகர் தான் நடத்தி வருகிறார். அத்துடன், ஹாஜி மஸ்தானின் மகள்களில் ஒருவரான ஷாம்ஷத் சுபரிவாலா இந்தக்கட்சியைக் கைப்பற்ற எடுத்த நடவடிக்கைகளையும் முறையான ஆவணங்களின் மூலம் சுரேஷ் ஷேகர் தற்காத்துக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த வழியில் சுரேஷ் ஷேகர் இந்தப்படத்துக்குப் பிரச்னை ஏற்படுத்துவதில் சிக்கல் இருக்காது.
தனக்கு ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இருப்பதை குறிப்பிட்டுச் சொல்லும் ரீதியில் பல நூறு கோடிகளை வசூலித்த கபாலி திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் சேரும் ஒரு திரைப்படத்தில் இருக்க சுரேஷ் ஷேகர் விரும்பாமல் இருக்க மாட்டார். அதேசமயம், ஹாஜி மஸ்தானைத் தவறாக சித்திரிக்கும் எண்ணம் ரஜினி, ரஞ்சித் ஆகிய இருவருக்கும் இருக்காது. எனவே, உண்மையான கதையை விளக்கி சுரேஷ் ஷேகரிடம் பேசினால், இப்படி ஒரு திரைப்படத்துக்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்தே ஆக வேண்டுமென சுரேஷ் ஷேகரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளராக இணைவார். இந்த செயல் ரஜினி படத்தின் வசூலை எதிர்பார்த்து தலைவர் 161 படத்தைத் தயாரிக்கும் தனுஷுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சுந்தர் ஷேக்கரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது லைன் பிஸியாகவே இருந்தது. ரஜினியின் படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை காரணமாக சுந்தர் ஷேகரை அனைத்து பத்திரிகையாளர்களும் சூழ்ந்திருப்பதை உணர்ந்தோம். இயக்குநர் ரஞ்சித் அவர்களை தொடர்புகொள்ள செய்த முயற்சியும் பயனளிக்கவில்லை. ஆனால், ஒற்றன் செய்திகள் இணையதள மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த நோட்டீஸ் அனுப்ப வேண்டிய சூழல் எத்தகையதாக இருக்கிறது என்ற சுந்தர் ஷேகரின் பேட்டியைக் காணமுடிந்தது. [ஒற்றன் செய்திகளுக்குப் பேசிய சுந்தர் ஷேகர்](https://youtu.be/WqmFqhi6weY) ** ஹாஜி மஸ்தான் எந்த நிலையிலும் தவறான காரியங்களை செய்யவில்லை. முண்டாசு கட்டிக்கொண்டு தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டிருந்த என்னை, சரியான துணி உடுத்தி நான்கு பேர் மதிக்கும்படி வாழ உபதேசித்தவர் அவர். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர். நானும் தமிழகத்திலிருந்து வந்தவன். இன்று அவரது பெயரை தவறான வழியில் பயன்படுத்தினால், இது ஒரு பதிவாகவே மாறிவிடும். Once upon a time படத்தில் ஹாஜி மஸ்தானின் கேரக்டர் என்று சொல்லி விளம்பரப்படுத்தியபோது வழக்கு தொடர்ந்தவன் நான். “இந்தப்படத்தில் இருக்கும் கேரக்டர் ஹாஜி மஸ்தான் அல்ல” என்ற அறிவிப்பை வைத்து படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. படமும் அப்படித்தான் ரிலீஸானது. மானம் தான் முக்கியம். மானத்தை விற்றுவிட்டு நாம் வாழவேண்டியதே அல்ல. ஹாஜி மஸ்தான் எத்தனையோ பாலிவுட் நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தார். ஆனால், அவர் இறந்தபோது யாரும் வரவில்லை. அதற்குக் காரணம் அவர் மீதிருந்த அவப்பெயர். அந்தப் பெயரை துடைக்க இதுபோன்று அவரைத் தவறாக பிரதிபலிப்பவர்களைத் தடுக்க வேண்டும். ஒருகாலத்தில் என்னை ஏடா மதராஸி என அழைத்தவர்கள்கூட இன்று சுந்தர் பாய் என்று அழைப்பதற்குக் காரணம் நான் இன்று வாழும் நல்வாழ்க்கை. அதை அமைத்துக்கொடுத்தவர் ஹாஜி மஸ்தான். எனவே, அவரது பெயரைக் கெடுக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்** என்று கூறியிருக்கிறார். ரஜினி தரப்பிலிருந்து எந்தவகையிலும் இதுவரை தொடர்புகொள்ள முயற்சி செய்யவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் சுந்தர் ஷேகர்.
�,”