மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 7 விழுக்காடு உயர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆகஸ்ட் மாதத்தில் 17,785 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 7 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16,641 டிராக்டர்கள் விற்பனையாகியிருந்தன. இதில் உள்நாட்டு விற்பனையிலும் 7 விழுக்காடு உயர்வு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15,356 டிராக்டர்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16,375 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. டிராக்டர் ஏற்றுமதியும் 1,285லிருந்து 1,410 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வேளாண் உபகரணங்கள் பிரிவின் தலைவர் ராஜேஷ் ஜெஜுரிகர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “காரிஃப் பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் வேளாண் பணிகளும் மேம்பட்டு, டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏற்றுமதியிலும் இந்த ஆண்டில் 10 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டுள்ளது” என்றார்.�,