டிராஃபிக் ராமசாமிக்குக் கிடைக்காத அதிர்ஷ்டம்!

public

திரை விமர்சனம்

படத்தின் துவக்கத்தில் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு பற்றித் தமிழ்மகன் எழுதிய ‘ஒன் மேன் ஆர்மி’ புத்தகத்தை சீமானும் குஷ்புவும் வெளியிடுகிறார்கள். அந்தப் புத்தகம் நடிகர் விஜய் சேதுபதி கையில் கிடைத்துப் படிக்க ஆரம்பிக்கிறார். அவர் படிப்பதன் வழியாகப் படத்தின் கதை ஆரம்பமாகிறது. பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு எதிரான போராட்டம், கிரைனைட்டுக்கு எதிரான போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் என டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் விக்கி.

இந்தப் போராட்டங்களினூடே மீன்பாடி வண்டியால் ஒரு கொலைச் சம்பவம் டிராஃபிக் ராமசாமி கண் முன் நிகழ்கிறது. இதைக் கண்ட அவர் மீன்பாடி வண்டிகளுக்குத் தடை விதித்திருந்தும் எப்படி இயங்குகிறது என்ற கேள்வியில், அதைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அந்த வழக்கில் அவர் வென்றாரா, தோற்றாரா என்பது படத்தின் மீதி கதை. இதனுடன், சமூகத்தில் ஏற்படும் பல்வேறு அவலங்களுக்காக அரசையும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து அவர் தொடுத்த வழக்குகள், அதனால் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள், பாதிப்புகள் என டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சில பக்கங்களை நம் கண் முன் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான அம்சங்கள் காட்சிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் பொதுத் தளத்தில் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த டிராஃபிக் ராமசாமி தனது குடும்பத்தினருடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதை அழகாகக் காட்டி இருக்கிறார்கள்.

நிஜமான மனிதர் ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது அந்த மனிதரின் ஆளுமை, சிந்தனை உணர்வுகள் ஆகியவற்றைப் பார்வையாளர்கள், புரிந்துகொள்ளும் வகையில் திரைக்கதை அமைய வேண்டும். அந்த மனிதரின் செயல்பாடுகள் என்ன, அதற்கான காரணங்கள் என்ன, அவற்றின் தாக்கம் என்ன, தனது செயல்களுக்காக அவர் பெற்றதும் இழந்ததும் என்ன, சமுதாயத்தில் அவருக்குரிய இடமும் பங்களிப்பும் என்ன என்பவற்றை ஓரளவேனும் பார்வையாளர்கள் உணரச்செய்ய வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது.

டிராஃபிக் ராமசாமியைப் பாராட்டி, அவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அவரை மேலோட்டமான வேடிக்கைப் பேர்வழியாகக் காட்டுகிறது. டிராஃபிக் ராமசாமி என்பவர் யார் என்பது பற்றிப் பொதுப்புத்தியில் தங்கியிருக்கும் படிமத்துக்கு அருகில்கூட இந்தப் படத்தின் சித்தரிப்பு வரவில்லை. பத்திரிகைகளின் மூலமாகவும் வாய்மொழியாகவும் டிராஃபிக் ராமசாமியைப் பற்றி நாம் கேள்விப்பட்ட விஷயங்களோடு ஒப்பிட்டால் படம் அவரது வாழ்வின் சருமத்தைக்கூடத் தீண்டவில்லை. டிராஃபிக் ராமசாமியின் செயல்பாடுகளின் தீவிரமும் அவற்றுக்குப் பின்னே இருக்கும் சமூக அக்கறையும் அவற்றுக்குரிய மரியாதையுடன் சித்தரிக்கப்படவில்லை.

பல காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாகவும் மலினமாகவும் இருக்கின்றன. ராமசாமி காவல் நிலையத்தில் அடிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கைதியிடம் ஏற்படும் மனமாற்றம் ஒரு உதாரணம். நீதிமன்றக் காட்சிகள் சில, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இசை / நடன ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் போல் அமைந்திருக்கின்றன. அந்த ஷோக்களில் நடுவர்கள் ஆடல் பாடலுடன் என்ட்ரி ஆவதுபோல் நீதிபதி (அம்பிகா) செல்போனில் பாட்டுக் கேட்டு ஆடிக்கொண்டு நீதிமன்றத்திற்குள் வருகிறார். வழக்கறிஞராக வரும் லிவிங்ஸ்டனும், எஸ்.ஏ.சி.யும் வாதாடுவது இரண்டு வி.ஜே.க்கள் கலாய்த்து சண்டை போட்டுக்கொள்வது போல் இருக்கிறது. காமெடி பண்ணுவதற்கு டிராஃபிக் ராமசாமி போன்ற ஆளுமைதான் கிடைத்தாரா?

ஒரு சில காட்சிகள் விஜய்யின் பழைய படங்களை நினைவுபடுத்துகின்றன. பத்ரி படத்தில் ஒரு காட்சியில் விஜய் அண்ணன் வில்லனிடம் அடி வாங்கிய பின், தனது அண்ணனிற்காக விஜய் குறுகிய நாட்களில் பாக்சிங்கிற்குத் தயாராவார். எஸ்.ஏ.சி.யும் இந்தப்படத்தில் தனக்குப் பலத்த அடி விழுந்த பின் அதே பாணியில் ஒரு இடத்தில் தயாராகிறார்.

இந்தக் கொடுமை போதாதென்று, போலீஸ் உயரதிகாரியான பிரகாஷ் ராஜ், முதல் அமைச்சரை எதிர்த்துப் பேசி, தப்பு செய்தவர்களைச்சுட்டுக் கொன்று, பஞ்ச் டயலாக் பேசிப் படத்தை முடிக்கிறார். இது மட்டுமா? நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது பரோட்டா ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

திரையில் எதைக் காட்டினாலும் அதில் குறைந்தபட்ச நம்பகத்தன்மை இருக்க வேண்டும். காமெடி, ஹீரோயிசம் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் சராசரிப் பார்வையாளர்களும் பிற காட்சிகளில் ஓரளவேனும் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். அதைக் கொண்டுவரக் கொஞ்சமாவது முயற்சி செய்திருந்திருக்கலாம்.

பலராலும் அறியப்படும், மதிக்கப்படும் சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அதற்குரிய மரியாதையுடன் அணுகி, இயல்பான காட்சிகளுடன், கூர்மையாகச் சொல்லியிருக்கலாம்.

படத்தின் பலம் என்றால் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் பொருந்தியிருப்பது. அந்தப் பொருத்தமும் தோற்றம் என்கிற அளவில்தான் இருக்கிறதே தவிர, ராமசாமியின் ஆளுமையைப் பிரதிபலிப்பதில் எஸ்.ஏ.சி. வெற்றிபெறவில்லை. அதற்குக் காரணம் பலவீனமான பாத்திரச் சித்தரிப்பு.

ரோஹிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா எனப் பல நடித்துள்ளார்கள். அதில் ரோஹிணியைத் தவிர யாருமே தனது கதாபாத்திரத்தோடு பொருந்திப்போகவில்லை. இதற்கு நடிகர்களைக் குறை சொல்ல முடியாது. வலுவற்ற திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மேலோட்டமான கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க முடியும்.

குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவும் பிரபாகரின் படத்தொகுப்பும் கதைக்கு ஏற்றாற்போல் அமைத்திருப்பது சிறப்பு. பாலமுரளி இசையில்இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கலை இயக்குநர் வனராஜ் போலீஸ் ஸ்டேஷனை தத்ரூபமாக அமைத்திருக்கிறார். ஒரு சிலஇடங்களில் கோர்ட்டும் அதுபோல் அமைந்திருக்கிறது.

மராத்தியில் கோர்ட் என்றொரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. கிராமப்புறப் பாடல் கலைஞரின் வாயிலாக இந்தியச் சட்டத் துறையில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்திய படம் இது. மிக இயல்பான காட்சிகளுடன் அபாரமான நம்பகத்தன்மையுடன் கூர்மையான சமூக விமர்சனத்தை முன்வைத்த படம் இது. அதிகார அமைப்பின் அத்துமீறல்களைத் துணிச்சலாக எதிர்த்து நிற்கும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையும் இத்தகைய படமாக உருவாகியிருக்கக்கூடிய அனைத்துச் சாத்தியங்களையும் கொண்டது. ஆனால், இயக்குநர் இதை வழக்கமான மசாலா படமாக ஆக்கிவிட்டார். அதுவும் எஸ்.ஏ.சி.யின் பழைய மசாலா படங்களின் பாணியிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

நிஜ வாழ்வில் ரத்தமும் சதையுமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கும்போது அவரைக் கற்பனையான மசாலா பட நாயகனாக மாற்றுவது அந்த ஆளுமைக்குச் செய்யும் மரியாதைதானா என்பதைப் படக் குழுவினர் யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் உடலுறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனின் கதை மலையாளத்தில் சிறந்த முறையில் படமாக எடுக்கப்பட்டது. குறைந்த விலைக்கு விற்கக்கூடிய தரமான சானிடரி நாப்கின்களைத் தயாரிப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த முருகானந்தம் என்னும் தமிழரின் வாழ்க்கை இந்தியில் படமாக எடுக்கப்பட்டு கவனம் பெற்றது. நம் காலத்தின் அதிசயமான போராளிகளில் ஒருவரான டிராஃபிக் ராமசாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *