புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இதற்கான அழைப்பை கிரண் பேடி இன்று முதல்வர் நாராயணசாமிக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும் விடுத்திருக்கிறார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ராஜ்பவன் அரசை நடத்திவருவதாகவும், அவரை புதுச்சேரியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை எதிரில் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தவிர பல்வேறு மாநில முதல்வர்கள் நாராயணசாமியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுச்சேரிக்கு வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற போராட்டம் நடக்காத நிலையில், புதுச்சேரி முதல்வரின் போராட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பிய கிரண்பேடி, தன்னுடன் பொது இடத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். கிரண் பேடியின் ஆலோசகர் அருள் நிதி தாஸ் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கக் கூடாது” போன்ற நிபந்தனைகளை நாராயணசாமி விதித்திருந்தார். இதை கிரண்பேடி ஏற்க மறுத்ததால் நேற்று நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தானது. நேற்று கிரண்பேடிக்கு திறந்த கடிதம் ஒன்றையும் முதல்வர் எழுதியிருந்தார்.
நாராயணசாமியின் போராட்டம் இன்றும் தொடர்ந்த நிலையில் இன்று (பிப்ரவரி 18) பகல் மீண்டும் முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இன்று ட்விட்டரில் தான் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை கிரண் பேடி வெளியிட்டிருக்கிறார்.
அதில், இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உங்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன். உங்களுடன் அமைச்சரவை சகாக்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், துணை நிலை ஆளுநரின் செயலாளர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தையோடு நான் ஏற்பாடு செய்திருக்கும் இரவு விருந்திலும் தாங்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் கிரண்பேடி.
இதற்கு முதல்வர் நாராயணசாமியும் சம்மதித்துள்ள நிலையில் இன்று மாலை பேச்சுவார்த்தைக்குப் பின் புதுச்சேரி அரசியல் குழப்பம் ஒரு தற்காலிக முடிவுக்கு வருமென்று தெரிகிறது.�,”