{டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு எதிராக முறையீடு!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலின் போது டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்படத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றே தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு, வாகன சோதனைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரியாக ஐஜி சேஷாயி உட்பட 40 போலீஸ் அதிகாரிகளை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் போது டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன் சார்பில் வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், “’டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. அதோடு, மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் இரண்டாண்டு பணி நீட்டிப்பு பெற்றுள்ளார். இதனால் அவர் மத்திய மாநில அரசுகளுக்கு சாதகமாகச் செயல்படலாம். எனவே அவர் டிஜிபியாக செயல்பட தடை விதித்து அவருக்குப் பதிலாக நியாயமான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், வாக்குக்காக ஆம்புலன்ஸில் கூட பணம் எடுத்துச் செல்லப்படும் நிலையில், தேர்தல் விதி மீறல்கள் குறித்து டிஜிபி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறையீட்டைக் கேட்டறிந்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, இதுதொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை (மார்ச் 11) விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share