மக்களவைத் தேர்தலின் போது டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் செயல்பட தடைவிதிக்கக் கோரிய வழக்கில், இதுதொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்படத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், ”டிஜிபியாக, மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில் தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்குப் புறம்பாக விதிகளை மீறிச் செயல்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு. மக்களவைத் தேர்தல் பணிகளில் அவர் ஈடுபடத் தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே அவர் டிஜிபியாக செயல்படத் தடை விதித்து நியாயமான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (மார்ச் 12) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, டிஜிபி ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்க முடியாது. மனுதாரர் தனது கோரிக்கையைத் தேர்தல் ஆணையத்திடமே முறையிடலாம் என்றும் அவர் தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்துத் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.�,