பிஜேபி-யா… மக்கள் நலக் கூட்டணியா?
டிஸ்கஷனில் விஜயகாந்த்!
‘‘கோபத்தில் இருக்கிறார் கருணாநிதி என்று, நேற்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதன் ஃபாலோ அப் தகவல்களுடன் வந்திருக்கிறேன்!’’ என்றபடியே சைன் இன் ஆனது ஃபேஸ்புக். ‘‘விஜயகாந்த்துடன் கூட்டணி அமைக்கும் வேலையை ஸ்டாலின் ‘நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்றுசொல்லி, யாரையும் அதில் நுழையவிடவில்லை. அதை, அவர் சரியாகச் செய்யவில்லை என்பதுதான் கருணாநிதிக்கு கோபம். அதனால்தான் உடனடியாக, தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமித்திருக்கிறார் கருணாநிதி. இந்தக் குழுவில் ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆலந்தூர் பாரதி ஆகிய நால்வரும் இருப்பார்கள். எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்குவது என்பதை இந்தக் குழு முடிவுசெய்யும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் மருமகன் சபரீசனும், மகேஷ் பொய்யாமொழியும் தமிழகம் முழுக்க சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இந்த சர்வேயில், திமுக-வுக்குச் சாதகமாக உள்ள தொகுதிகள் எவை என்பதை லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். அவர்கள் போட்ட லிஸ்ட்டில் தேமுதிக-வுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்பதும், காங்கிரஸுக்கு சாதகமானவை எவை என்பதும் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் தேமுதிக-வை மட்டும் டெலிட் செய்துவிட்டு ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைவைத்துத்தான் கூட்டணி தொடர்பான பேசுவார்த்தையை அவர் நடத்தப் போகிறார்.
இன்று காலை பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் ஆகிய இருவரும் கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்திருக்கிறார்கள். விஜயகாந்த் ஏன் கூட்டணிக்கு வரவில்லை என்ற காரணத்தை, அன்பழகனிடம் ஸ்டாலின் மறுபடியும் விளக்கியிருக்கிறார்.
அந்தச் சந்திப்புக்கு வந்த கட்சி நிர்வாகிகளிடம் கருணாநிதி, ‘விஜயகாந்த் போனா போகட்டும் விடுய்யா.. நாம ஜெயிச்சுடுவோம்! எல்லோரையும் தைரியமா வேலையப் பார்க்கச் சொல்லுங்க, தொண்டர்களை உற்சாகப்படுத்துங்க’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு நிர்வாகிகள், ‘தொண்டர்கள் எல்லோரும் உற்சாகமாகத்தான் இருக்காங்க. நாம, அதிக அளவுல போட்டியிடுவதால நிறைய பேருக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதனால, கட்சி நிர்வாகிகளுக்கும் சந்தோஷம்தான்!. விஜயகாந்த் இல்லை என்பது நமக்குப் பெரிய பாதிப்பாக இருக்காது!’ என்று சொன்னார்களாம்’’ என்று ஸ்டேட்டஸ் போட்டது.
அதைப்படித்து ஷேர் செய்துகொண்டது வாட்ஸ் அப். ‘‘மகளிர் அணி மாநாட்டுக்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் யாரும் சென்னையில் இருக்கக்கூடாது. உடனடியாக, அவரவர் ஊருக்குக் கிளம்புங்கள். நீங்கள் ஊரில் இருக்கிறீர்களா என்பதை நாங்கள் செக் பண்ணுவோம் என, தேமுதிக-வில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். எம்எல்ஏ-க்கள் பலர் அதிருப்தியில் இருப்பதால், சென்னையில் அவர்கள் இருந்தால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்திக்கக்கூடும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார் சுதீஷ். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக விஜயகாந்த் அமைத்த குழு நேற்று, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. அந்தக் கூட்டத்துக்கு விஜயகாந்த்தும் வந்திருக்கிறார். ‘என்னய்யா சொல்றாங்க… நாம தனியா நிற்கப் போறோம்னு சொன்னதுக்கு?’ என்று கேட்டாராம். அதற்கு, குழுவில் இடம் பெற்றிருந்த விழுப்புரம் வெங்கடேசன் ‘எல்லோரும் கொண்டாடுறாங்க கேப்டன். உங்களுக்குத்தான் தைரியம் இருக்கு’னு பேசுறாங்க. நம்ம கட்சிக்காரங்கதான் கொஞ்சம் அப்செட் ஆகிட்டாங்க’ என்று சொல்லியிருக்கிறார். ‘அதெல்லாம் பார்த்துக்கலாம். நீ என்ன நினைக்கிற?’ என்று கேட்டாராம் விஜயகாந்த். ‘கேப்டன் எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்’ என்று வெங்கடேசன் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு பேசிய விஜயகாந்த், ‘நாம யாரு கூடவும் கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டோம். நம்மகூட யாரு வராங்கன்னு பார்ப்போம். எந்தத் தொகுதி கேட்குறாங்கன்னு பார்த்துட்டு, அதுக்குப் பிறகு வேட்பாளர் லிஸ்ட்டை சரி பண்ணிக்கலாம். நம்மகிட்ட எல்லா தொகுதிக்கும் லிஸ்ட் ரெடியா இருக்கணும்!’ என்று சொன்னாராம்.
ஏற்கனவே, 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை முடிவுசெய்து அவர்களிடம், பொதுத் தொகுதிக்கு 50 லட்சமும், தனித் தொகுதிக்கு 25 லட்சமும் தேமுதிக-வில் வாங்கியிருப்பது பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அப்படி பணம் கட்டியவர்கள் பலரும் திமுக கூட்டணி வரும் என்ற நம்பிக்கையில்தான் பணம் கட்டி இருந்தார்கள். கூட்டணி இல்லை என விஜயகாந்த் அறிவித்ததில் அவர்கள் பலரும் அப்செட் ஆகிவிட்டார்கள். இன்று காலை அப்படி பணம் கட்டியவர்களில் சிலர் தேமுதிக அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள். ‘திமுக கூட்டணி என்பதால்தான் நாங்க பணம் கட்டினோம். தனியா என்றால் எங்களுக்குப் போட்டியிட விருப்பம் இல்ல. பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க!’ என்று கேட்டார்களாம். கேப்டன்கிட்ட சொல்றோம்! என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் எனவும் பேசி வருகிறார்கள் விருப்பமனு போட்டவர்கள்’’ என்ற செய்தியை அப்டேட் செய்தது வாட்ஸ் அப்.
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராக இருந்தது. ‘‘விஜயகாந்த் தலைமையை ஏற்பது பற்றி பிஜேபி தலைமையுடன் தொடர்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் தமிழிசை. தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜவ்டேகரும் இது தொடர்பாக தமிழிசையிடம் பேசியிருக்கிறார். ‘மக்கள் நலக் கூட்டணியையும் தீவிரமா முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் முதல்வர் ஆகப் போறது இல்லை. அப்புறம் அவரே இருந்துட்டு போகட்டுமே… அதுல நமக்கு என்ன கௌரவக் குறைச்சல் ஆகிடப் போகுது? தமிழ்நாட்டுல ஒரு சீட்கூட ஜெயிக்கலைன்னா அது ரொம்பவும் அசிங்கமாகிடும். அதனால, எப்படியாவது விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்தாகணும். நீங்க அமித்ஷாகிட்ட பேசுங்க…’ என்று சொல்லியிருக்கிறார். ஜவ்டேகருக்கும் பேச்சுவார்த்தையில் தீவிரமாகியிருக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணியை பொறுத்தவரை, விஜயகாந்த் திமுக பக்கம் போகவில்லை என்பதே அவர்களுக்குப் பெரிய சந்தோஷம். ‘நான்தான் சொன்னேன் இல்ல… பழம் நழுவி விஷம் கலந்த பாலில் விழாது’ என்று, எனச் சொல்லிவருகிறார் வைகோ. மக்கள் நலக் கூட்டணியில் வைகோ-வை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது மதிமுக தொண்டர்களின் விருப்பம். விஜயகாந்த் தலைமையில் இணையும்போது, அதை விட்டுக்கொடுக்கவும் வைகோ தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘எனக்கு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. அதனால் நாம விஜயகாந்த்கிட்ட போனாலும் தப்பு இல்லை’ என்று சொல்லிவருகிறாராம் வைகோ.
மக்கள் நலக் கூட்டணியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும் என, பிரச்சார யுக்தி வரை வகுத்துவிட்டார் திருமாவளவன். அவரது எதிர்பார்ப்பும் விஜயகாந்த்துடன் சேர வேண்டும் என்பதுதான். வைகோ என்ன நினைப்பாரோ என்பதால்தான் திருமா அமைதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். விஜயகாந்த்துடன் கூட்டணிக்குப் போனால் நமக்கு எவ்வளவு சீட் கொடுப்பார்? என்றும் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார்கள். விஜயகாந்த் பக்கம் பிஜேபி போய்விடக் கூடாது. அதனால் உடனடியாக விஜயகாந்த்தை சந்தித்துப் பேச வேண்டும் என, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.”
அதிமுக செய்தியுடன் வந்தது ட்விட்டர். ‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். ஓபிஎஸ் மீது ஜெயலலிதா கடுமையான கோபத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. தி.நகரில் இளவரசியின் மகன் தங்கியிருக்கும் வீட்டுக்கு சசிகலா அடிக்கடி போய் வருகிறாராம். ஏற்கனவே, விவேக் தயார்செய்த பட்டியலில் சில திருத்தங்களைச் சொல்லி வருகிறாராம் சசிகலா. அதிமுக வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அவர்களின் ஜாதகத்தையும் பார்க்கத் தவறவில்லையாம். எல்லாம் சரியாக வந்தபிறகு ஒரு லிஸ்ட்டை சசிகலாவிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டைத்தான் சசிகலா, ஜெயலலிதாவிடம் கொடுத்திருக்கிறார். இன்று காலை வேட்பாளர் பட்டியலை எடுத்துக்கொண்டு சசிகலா, திருநள்ளார் சனிபகவன் கோவிலுக்குப் போயிருக்கிறாராம்’’ என்று ட்விட் அடித்துவிட்டு சைன் அவுட் ஆனது.�,”