மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
‘‘காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்கும் பணியில் இறங்கிவிட்டார் ராகுல் காந்தி. தீபாவளிக்குப் பிறகு ராகுல் காந்தி தலைவர் ஆவார் என்று பேசப்பட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்களுமே கூட இதை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். பின் குஜராத், இமாசல பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் ராகுல் காந்தி தலைவர் ஆவார் என்று கட்சியில் இருந்து தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்போது சனிப்பெயர்ச்சி முடிந்தபிறகே ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்பார் என்று டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் டிசம்பர் 19 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்க இருப்பதால், ராகுலின் ராசிப்படி சனிப்பெயர்ச்சிக்குப் பின்னர் தலைவர் பதவியை ஏற்கும்படி அவருக்கு பிரபல ஜோதிடர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். இதனால் வரும் சனிப்பெயர்ச்சி முடிந்தபிறகே ராகுல் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்பார் என்கிறார்கள். சனிப்பெயர்ச்சி முடியும்போதே இரு மாநில தேர்தல்களும் முடிந்துவிடும் என்பதால் தலைவர் பதவி ஏற்கத் தயாராகிவிட்டார் ராகுல் காந்தி.
தான் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய பொறுப்பாளர்களை அதிகாரபூர்வமாக நியமிக்க முடிவு செய்திருக்கிறார். , அந்த மாற்றங்களில் யாரையெல்லாம் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கிறாரோ அவர்களை எல்லாம் டெல்லிக்கு அழைத்துப் பேசியபடியே இருக்கிறார். தமிழகத்தில் இருந்தும் சிலர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் பெண்கள் இருவரும் அடக்கம்.
அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸுடன் இணைக்கும் முயற்சிக்கும் அஸ்திவாரம் போட்டு இருக்கிறார் ராகுல். மீண்டும் காங்கிரஸ் கட்சியில் வாசனை இணைக்க, மூப்பனார் மீது இருக்கும் மரியாதையால் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி தலைமையிடம் பேசி வருவது பற்றி நாம் ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதன்படியே ஜி.கே. வாசனுக்கு அகில இந்திய அளவில் மிக முக்கிய பொறுப்பு கொடுத்து கௌரவிக்க பேச்சுவார்த்தை தொடங்கி ஒருபக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதே போல், ப.சிதம்பரத்துக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுக்கவும் ராகுல் திட்டமிடுவதாக சொல்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ராகுலுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் தொடங்கி இருக்கிறதாம். அதனால், அந்தப் பதவியை வேறு யாருக்கு கொடுப்பது என ஆலோசனையில் இறங்கி இருக்கிறாராம் ராகுல். இதில் பல தலைவர்கள் ரேஸில் ஓடிக் கொண்டிருந்தாலும் இப்போது காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளராகவும், கோவா மாநில பொறுப்பாளராகவும் இருக்கும் டாக்டர் செல்லகுமார் முன்னணியில் ஓடிக் கொண்டிருப்பதாக
காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சிருக்கிறது.
மகிளா காங்கிரஸில் இருக்கும் பெண் நிர்வாகிகள் ஐந்து பேர் ராகுலின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சீக்ரெட் ஆக சில அசைன்மெண்ட்களை கொடுத்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி இருக்கிறாராம் ராகுல். அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் மாற்றங்களை நிகழ்த்தப் போகிறாராம். ‘ராகுல்ஜி இவ்வளவு வேகமாக களத்தில் இறங்கி செயல்படுவதை நாங்களே இப்போதான் பார்க்கிறோம். எல்லா மாநிலத்தோட புள்ளிவிபரங்களையும் ஐபேடில் வெச்சிருக்காரு… இதை செய்யலாம்… அதை செய்யலாம்னு பேசி எங்களுக்கே அதிர்ச்சி கொடுக்கிறாரு…’ என்று பிரமிப்புடன் சொல்கிறார்கள் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
இதற்கு ஒரு ஸ்மைலியை அனுப்பிவிட்டு தனது மெசேஜை போஸ்டாக பதிவு செய்தது ஃபேஸ்புக்.
“ஆர்.கே.நகரில் மறுபடியும் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறார் மருது கணேஷ். திமுகவுக்கு இந்த தேர்தலில் ஆதரவுக் கரம் நீட்டுவதாக அறிவித்துவிட்டார் திருமாவளவன். தேமுதிகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் போட்டியிடாது என முன்பே விஜயகாந்த் சொல்லி வந்தார். அதனால், அவரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஆச்சர்யமில்லை. இது பற்றி விஜயகாந்த்திடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசி இருக்கிறார்கள்.
‘நாம எதுக்கு வலிய போய் ஆதரவு கொடுக்கிறதா சொல்லணும். அவங்களுக்கு தேவைன்னா அவங்கதானே வந்து கேட்கணும். அப்படிக் கேட்டிருந்தா இன்னைக்கு அவங்கதான் ஆட்சியில் இருந்து இருப்பாங்க. தேர்தல் சமயத்துல ஸ்டாலின் வந்து பேசினாரா? யார் யாரையோ பேசுறதுக்கு அனுப்பினாரு. ஏன் அவரு வந்து பேச மாட்டாரா… இப்போ வேணும்னா அவரு வந்து பேசட்டும். அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் பற்றி விஜயகாந்த் சொன்னதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் கவனத்துக்கும் இந்த தகவல் போயிருக்கிறது. அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.
டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, ‘யார்கிட்டையும் கூட்டணி என்று நாம போகவேண்டாம் ஆதரவும் கேட்க வேண்டாம். நம்மளோட பலம் என்னாங்கிறதை தனித்து நின்று போட்டியிட்டுக் காண்பிப்போம். அப்போதான் எடப்பாடிக்கு பயத்தை கொடுக்கிறமாதிரி இருக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நிலைப்பாட்டைச் சொல்லி வருகிறார்.
தீபாவைப் பொறுத்தவரைக்கும் இந்த தேர்தலில் எப்படியாவது போட்டியிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ‘எடப்பாடி தரப்பிலிருந்து நேரடியா பேசினால் அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி யோசிக்கலாம். நாம எதிர்க்குறது சசிகலா குடும்பத்தை தான் எடப்பாடியை அல்ல. அதனால, ஒருவேளை எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் இருக்குற அமைப்பு எல்லாத்தையும் கலைச்சிட்டு எடப்பாடி தரப்போடு ஐக்கியம் ஆகிடலாம்’ என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம் தீபா’’ என்ற ஸ்டேடஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.
�,”