மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.
“கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் போன இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தமிழக காவல் துறையை அதிர வைத்திருக்கிறது. சில நாட்களாகவே டென்ஷனாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சம்பவம் அடுத்த டென்ஷனை உண்டாக்கி இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடவும் விவசாயிகள், மீனவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறவும் கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் போய்விட்டு நேற்று இரவுதான் சென்னை திரும்பினார் முதல்வர். இன்று காலையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுடப்பட்ட தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்தான் முதல்வருக்குச் சொல்லியிருக்கிறார்.
அதிர்ந்துபோன முதல்வர், கொள்ளைச் சம்பவம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ‘அந்த டீம்ல எவ்வளவு பேர் ராஜஸ்தான் போனாங்க?’ என விசாரித்தாராம். மூன்று பேர் போனதாக கமிஷனர் சொல்ல… டென்ஷன் ஆகிவிட்டாராம் முதல்வர். ‘கொள்ளை கும்பலை பிடிக்க இங்கே இருந்து ராஜஸ்தான் போறாங்க… மூணு பேரைத்தான் அனுப்புவீங்களா? தனிப்படை என்றால் அது பெரிய டீமாக இருக்க வேண்டாமா? நாமே தேடிப் போய் தலையைக் கொடுத்த மாதிரி இருக்கு. இனி பாருங்க எல்லோரும் திட்டுவாங்க… கேள்வி கேட்பாங்க.. நான்தான் பதில் சொல்லி ஆகணும்’ என்று சொன்னவர், ‘நீங்க உடனே இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போங்க. அவங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துங்க…’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.
அதன் பிறகுதான் கமிஷனர் விஸ்வநாதன் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டுக்கு விரைந்திருக்கிறார்.
டிஜிபி ராஜேந்திரனிடமும் உடனடியாக முதல்வர் பேசியிருக்கிறார். ‘எனக்கு போலீஸ் டிபார்ட்மென்ட் மேல இருக்கும் நம்பிக்கை போய்ட்டே இருக்கு. அம்மா இருந்தபோது சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது? கொலை கொள்ளை சம்பவங்கள் இவ்வளவு நடக்கவே இல்லை. ‘நாங்க ஆட்சிக்கு வந்ததும் இங்கே இருந்த கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஓடிட்டாங்க’ என்று அம்மாவே பெருமையாக சொன்னாங்க. ஆனால், இப்போ போன கொள்ளையர்கள் எல்லாம் திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வந்துட்டாங்களா? நம்ம போலீஸ் என்ன செஞ்சுட்டு இருக்கு? யாரும் உங்க டியூட்டியை சரியாக பார்க்கலைன்னுதான் எனக்கு தோணுது. நான் சி.எம். ஆன பிறகு எவ்வளவு கொலையும், கொள்ளையும் நடந்திருக்கு தெரியுமா? நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு எல்லோரும் பேச ஆரம்பிக்கணும். அதுக்காகத்தான் நீங்க அமைதியாக இருக்கீங்களா?’ என்று கோபமாகவே கேட்டாரம்.
அதற்கு டிஜிபியும் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார். ஆனால், அதில் சமாதானம் ஆகாத முதல்வர், ‘கொள்ளையர்களைத் தேடிப் போற தனிப்படையைக்கூட உருப்படியாக அமைக்க முடியலை. இப்போ நம்ம சைடுல ஒரு உயிர் போயிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு நாமதான் பதில் சொல்லணும். இனியும் இப்படியே அலட்சியமாக இருந்தீங்கன்னா நான் எல்லோரையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்திருக்கிறார். அதோடு, உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர். காயமடைந்த மற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர். வழக்கமாகப் பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழந்தால் கொடுக்கும் நிவாரணங்களை எல்லாம் தாண்டி, பெரியபாண்டி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
“என்ன பேசி என்ன ஆகப் போகுது? போன பெரியபாண்டி உயிர் திரும்ப வரவா போகிறது? வேதனையும் துயரங்களும் அந்தக் குடும்பத்துக்குதானே!” என்று கமெண்ட் போட்டது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் எடப்பாடிக்கு அருகே உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்துக்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு வருபவர்களிடம் பெயர், ஊர் என எல்லாம் விசாரிக்கிறது போலீஸ். நோட்டிலும் எண்ட்ரி போடுகிறார்கள். இந்த ஊரில் உள்ள முக்கியமானவர் ஒருவர் வீட்டுக்கு ஒரு பெண் நீண்ட காலமாக வந்து போவாராம். ஆனால், இப்போது போலீஸ் கெடுபிடி காரணமாக அந்தப் பெண் வருவதில்லையாம். ‘போலீஸ்காரங்க நோட்டுல கையெழுத்து போட்டுட்டு போகச் சொல்றாங்க. எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்னை ஆகிடும்’ எனச் சொல்லிவிட்டாராம் அந்தப் பெண். இதில் நொந்து போன அந்த முக்கியப் பிரமுகர், ‘இவரு முதல்வர் ஆனாலும் ஆனாரு… தேவையில்லாமல் என் வாழ்க்கையில் விளையாடுறாரு… சொந்த ஊருக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடச் சொல்லி யாரு பழனிசாமியை கேட்டாங்க? அவரு குடியிருக்கும் வீட்டுக்கு மட்டும் பாதுகாப்பு போட்டா போதாதா?’ என வருபவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம் அந்த முக்கியப் பிரமுகர்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.�,