மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசுக்கு வருமான வரித் துறை கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தில் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது துணை முதல்வர் பன்னீர், ‘அம்மா இருக்கும்போது இப்படி ஆதாரம் எல்லாம் தேவையே இல்லை… ஒரு அமைச்சர் மீது புகார் வந்தால் அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குவார். கட்சிப் பொறுப்பையும் பிடுங்குவார். ஆனால் இப்போ நமக்கு ஆதாரத்துடன் வருமான வரித் துறை கடிதம் கொடுத்திருக்கு. இப்பவும் நடவடிக்கை இல்லை என்பதால்தான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்யுறாங்க. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்…’ என்று சொன்னாராம்.
அதற்கு எடப்பாடியோ, ‘அம்மாவோட மறைவுக்குப் பிறகு அமைச்சரவையில் நாம பெரிய மாற்றம் கொண்டு வரவில்லை. முக்கியமானவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். தேர்தலில் தொடங்கி எல்லாக் கட்டங்களிலும் அவரோட உதவிகளை நாம எதிர்பார்த்தோம். இப்போ நாம அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் அவர் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். தினகரன் பக்கம்கூடப் போகலாம். ஏற்கெனவே 18 பேரால நாம நிம்மதி இழந்திருக்கோம். இதுல இன்னொருத்தரையும் இழக்கணுமா? அதுவும் இல்லாமல் அவரை வெளியே விட்டால், எங்கே போனாலும் நம்மை விமர்சனம் செய்வாரு. இங்கே என்ன நடக்குதுன்னு பொதுவெளியில பேசுவாரு. அது நமக்கான சிக்கலை இன்னும் அதிகமாக்கும். அவரோட ஆதரவாளர்கள் என ஒரு குரூப் கிளம்புவாங்க. அதனால விட்டுப் பிடிக்கிறதுதான் நல்லது’ எனச் சொன்னாராம்.
பன்னீர் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லையாம். ‘இப்படி நாம ஒவ்வொருத்தருக்கும் பயந்துக்கிட்டு இருக்கிறதாலதான் எல்லோரும் அவங்க விருப்பத்துக்கு ஆட்டம் போடுறாங்க. அவரு ஒருத்தரால என்ன செஞ்சிட முடியும்? அம்மா இருக்கும் போது இப்படி எதுக்கும் அவங்க யோசிச்சது இல்லை. அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் நாம இருக்கோம் என்பதைக் காட்ட நடவடிக்கை அவசியம். தப்பு செஞ்சவங்களை நீக்கிட்டாங்க என்று மக்களிடம் நமக்கு நல்ல பேருதான் வரும். அவரு பேசுறது பெருசா எடுபடாது. அப்போ இவ்வளவு நாள் உள்ளே இருந்துகிட்டு நீயும் சேர்ந்துதானே தப்பு செஞ்சேன்னு அவரையும் திருப்பிக் கேட்பாங்க. நடவடிக்கை எடுப்பதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்…’ எனச் சொல்லியிருக்கிறார். எடப்பாடி திரும்பத் திரும்ப, ‘அவசரப்பட வேண்டாம்…’ என்பதையே சொல்லியிருக்கிறார்.
ஆனால், கட்சிக்குள் இருக்கும் கொங்கு மண்டலத்து அமைச்சர்கள் எல்லோருமே, விஜயபாஸ்கரை மாற்ற வேண்டும் எனச் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்றும் அப்டேட் ஆனது.
“விஜயபாஸ்கர் மீது வருமான வரித் துறை நடவடிக்கையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக எடப்பாடி நினைக்கிறார். இவ்வளவு நாளாக இல்லாமல் இப்போது திடீரென அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆதாரங்களுடன் வருமான வரித் துறை அனுப்பியிருப்பதே, அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செய்ததுதான் என்றும் அவர் நினைக்கிறாராம். அதிமுக அமைச்சர்கள் மீது அதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக எடுத்துவருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். அதனால், இப்போது விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்தால், அது பிஜேபி நினைப்பதை நாம் செய்தது போல ஆகிவிடும் எனவும் கணக்குப் போடுகிறாராம் எடப்பாடி. சில நாட்கள் விமர்சனங்களுக்குப் பிறகு எல்லாம் அடங்கிவிடும் என்றுதான் அவர் நினைக்கிறார். இது தொடர்பாக விஜயபாஸ்கரும் எடப்பாடியுடன் பேசியிருக்கிறார். அவரிடம் நம்பிக்கை தரும் விதத்தில்தான் எடப்பாடி பேசியதாக விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,